2000 ஏக்கர் நில சிக்கல்: அனைவருக்கும் தொலைநோக்குப் பார்வை வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 22-

2008 பொதுத் தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயத்தின்பால் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மீது கொண்ட அக்கறையால் பேராக் மாநில தேசிய முன்னணி அரசு ஈராயிர ஏக்கர் நிலத்தை அம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அளித்தது. வெறும் நிலம் மட்டும்தான் வழங்கப்பட்டதே அன்றி அதைப் பராமரிப்பதற்கான நிதியோ கட்டமைப்போ எதுவும் மாநில அரசால் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், அந்த நிலத்தைப் பாராமரிப்பதற்காக பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் என்ற பெயரில் ஓர் அறவாரியம் அமைக்கப்பட்டு அந்த ஈராயிர ஏக்கர் நிலத்தை பராமரிக்கும் வழிவகை காணப்பட்டது.

பொட்டல் வெளி நிலம்; அதிலும் சுமார் எட்டில் ஒரு பங்கு நிலம் பாறைகளால் நிரம்பியுள்ளது. எப்படியாவது இந்த நிலைத்தைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்த அறவாரியப் பொறுப்பாளர்கள், ஒன்றரை கோடி வெள்ளியை கடனாகப் பெற்று செம்பனை நடவு செய்தனர்.

2009-ஆம் ஆண்டில் மாநில அரசு வழங்கிய மேடுபள்ளமும் பொட்டல் வெளியுமான நிலம், 2013-ஆம் ஆண்டளவில்தான் ஓரளவு சீரமைப்பு முடிந்த நல்ல நிலைக்கு வந்தது. கடன்பெற்று பயிரிடப்பட்ட நிலத்தில் இப்பொழுதுதான் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதில், செம்பனை எண்ணெய் விலையும் பன்னாட்டு சந்தையில் நிலையானதாக இல்லை. இருந்தாலும் ஓரளவு வருமானம் வருகிறது.

இந்த வருமானம் கடன் கொடுத்தவர்களுக்கு தவணைப் பணமாக செலுத்தப்படுகிறது. கடன் முடிந்ததும் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக முழுவதும் பயன்படுத்தப்படும். இதுதான் உண்மை நிலை.

இதை உணராமல், தமிழ்ப் பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தில் இருந்து சல்லிக் காசுகூட வரவில்லை என்றால் அது என்ன நியாயம் என்று புரியவில்லை. எதற்கும் பயனில்லாத நிலைத்தைத் திருத்தி, பண்படுத்தி இன்று பலகோடி மதிப்புள்ள சொத்தாக அதை நிருவகிக்கும் வாரியம் மாற்றி இருக்கிறது.

கிடைக்கின்ற வருமானம் தோட்டத் தொழிலாளர் சம்பளம் உள்ளிட்ட நிருவாக செலவுக்கும் கடன் தவணைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு வாரியம் கோடிக் கணக்கான சொத்தை கைவசம் வைத்துள்ளது. இதைப் பிடுங்கி மீண்டும் மாநில அரசிடம் கொடுத்தால், காலப் போக்கில் அதன் நிருவாகக் குழுவில் மற்ற இனத்தவரும் இடம்பெறக் கூடும். அதனால், அது கைமாறிப் போகவும் இடம் இருக்கிறது.

இப்பொழுதுதான் தலை எடுக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலம் பொறுமை காக்காமல் ‘ஒண்ணுமில்லை; மண்ணுமில்லை’ என்பதில் என்ன பொருள் இருக்கிறது. இப்பொழுது இருக்கிற அறவாரியத்தில் ஏதும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், அதில் மாற்றம் செய்யலாம்.

நிருவாகம் செம்மையாக இருக்கும்பொழுது, எந்த 2000 ஏக்கர் நிலத்தை நிருவகிக்கும் பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரிய அறங்காவலர் குழுவில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும். பொறுப்பில் இருப்பவர்கள் இந்த 2000 ஏக்கர் நிலத்தில் பாறையாக இருக்கும் 230 ஏக்கர் நிலத்தை மாற்றிக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்காமல், இந்திய சமுதாயத்திற்காக பலகோடி மதிப்புள்ள தோட்டச் சொத்து இருக்கிறது என்பதை எண்ணி மகிழாமல் அதைப் பிடுங்கி மீண்டும் மாநில அரசிடம் கொடுக்க ஏன் இப்படி துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதில் அரசியலைக் கலக்காமல், நம் எதிர்காலத்தையும் சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சற்று பெருந்தன்மையாக அனைத்துத் தரப்பினரும் நடந்து கொண்டால், நாளை சமுதாயம் நன்மை அடையும். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சிந்திப்பார்களா?