கோத்தா சமரஹான், ஜூலை 23-

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா, தீபகற்ப மலேசிய எல்லையைக் கடந்து சரவாக், சபா ஆகிய பெருமாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

“சரவாக்கில் வாழ்கின்ற இந்தியர்களும் மித்ரா-வின் மூலம் கல்வி-பொருளாதார-சமூகநல உதவிகளைப் பெறலாம். இதன் தொடர்பில் இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் சரவாக் இந்தியர்களை நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து நேரிய கண்டறிய இருக்கிறேன்” என்று அமைச்சர் சொன்னார்.

உண்மையில் தீபகற்ப மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக கல்வி-பொருளாதார வளர்ச்சிக்காக மத்தியக் கூட்டரசு ஏற்படுத்தியதுதான் மித்ரா; இருந்தாலும் சபா-சரவாக்கில் வாழும் இந்தியர்களும் இதில் பயன்பெறும் வாய்ப்பு இயல்பாகவே இருக்கிறது என்று இங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபின் பேசினார்.

அதேவேளை, சரவாக்கில் வாழும் இந்தியர்களைப் பற்றி நான் ஒரளவிற்கு அறிவேன். இங்குள்ள இந்தியர்களை நேரில் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்தபோது, இங்கு சிறுபான்மையினராக வாழ்வதாகத் தெரிவித்தனர்.

இன்னொரு நாளில் வேறொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்படியும் அப்போது இங்குள்ள இந்தியர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சற்று விரிவாக பேசலாம் என்றும் அவர்களிடத்தில் தெரிவித்ததாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.