மாற்றுத்திறனாளிகளின் வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஆக்கிரமிப்பு!

சிலிம் ரிவர், ஜூலை 23-

இங்குள்ள மேபேங்க் வங்கியின் முன்புறமுள்ள உடற்குறையுடையோருக்கான சிறப்பு வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்களுக்குத் தொல்லை தரும் சம்பவம் பல மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால், இதற்குண்டான நடவடிக்கை எடுக்கும் அமலாக்க அதிகாரிகள் மௌனம் காப்பது வேதனை அளிப்பதாக சிலிம் ரிவர் வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிலிம் ரிவர் வட்டாரத்தின் மையப் பகுதியின் இந்த மேபேங்க் வங்கி அமைந்துள்ளது. எல்லாக் கடைத் தொகுதிகள் போலவே இங்கும் உடற்குறையுடையோருக்கான சிறப்பு வாகன நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்விடத்தில் சில பொறுப்பற்றத் தரப்பினர் தங்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விடுகின்றனர். இதனால், இங்குள்ள உடற்குறையுடையோர் தொலைவில் தங்களின் வாகனத்தை நிறுத்த வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

நெரிசலானப் பகுதி என்பதால் அவ்விடத்தில் எளிதில் கார் நிறுத்துமிடங்கள் காலியாக இருப்பதில்லை. சாதாரணமானவர்கள் தங்களின் வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு நடந்து வரலாம். ஆனால், உடற்குறையுடையோர் அப்படி இல்லை.

தாங்கள் செல்ல வேண்டிய கடைக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அருகிலேயே (முன்புறத்திலேயே) தங்களின் வாகனத்தை நிறுத்தவே இது போன்ற சிறப்பு வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், இதனை சற்றும் உணராமல் மோட்டார் சைக்கிள்கள் இவ்விட்த்தில் நிறுத்தி உடற்குறையுடையோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர் சில பொறுப்பற்றத் தரப்பினர்.

இந்தப் பொறுப்பற்றத் தரப்பினரைக் கண்காணிக்கவும் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றபோது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய அமலாக்க அதிகாரிகள் எங்கே போனார்கள் எனும் கேள்வியை இங்குள்ள மக்கள் எழுப்புகிறார்கள்.
தவறான முறையில் நிறுத்தப்படுகிற கார், வாகன நிறுத்துமிடக் கட்டண சீட்டு இல்லாத கார் ஆகியனவற்றை கவனித்து அபராத சீட்டுகளை கையில் திணிக்கும் அமலாக்க அதிகாரிகள் உடற்குறையோருக்கான விவகாரஙகளில் அலட்சியம் காட்டும் காரணம் என்ன என்றும் பொதுமக்கள் வினவுகின்றனர்.