அமைச்சர்தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்! -டத்தோ டோமினிக் லாவ் பதிலடி

கோலாலம்பூர், ஜூலை 24-

தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகமது ரிட்சுவான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த தம்மை ‘மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்’ என்று சாடியுள்ள முகமது ரிட்சுவான்தான் உண்மையில் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் பதிலடி கொடுத்தார்.

பறக்கும் கார் திட்டத்தை முன்மொழிந்த காரணத்திற்காக அமைச்சரை தாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, வெறும் 1 மில்லியன் வெள்ளியைக் கொண்டு இந்த பறக்கும் கார் திட்டத்தின் மீது ஆய்வு நடத்தலாம் என்ற அவரின் கூற்று சாத்தியமற்றது என்பதற்காகவே தாம் அவ்வாறு கூறியதாக டோமினிக் லாவ் விவரித்தார்.

“நம்மால் ஒரு சிறந்த காரையே உருவாக்க முடியவில்லை. இந்நிலையில் நாம் எதற்கு பறக்கும் காரை உருவாக்க வேண்டும்? அதை விடுத்து செயற்கை அறிவாற்றல் மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் ( ஐஒடி) ஆகிய துறைகளில் கவனம் செலுத்தினால் என்ன தவறு?” என்று அவர் வினவினார்.

சம்பந்தப்பட்ட அமைச்சரின் முக்கிய பணி ஆக்கப்பூர்வமான வர்த்தகம் மற்றும் சந்தைகளை மேம்படுத்த உள்நாட்டு இளைஞர் மற்றும் இளம் தொழில்முனைவர்களை ஊக்குவிப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்று டோமினிக் லாவ் நினைவுறுத்தினார்.

புதிய அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகிய துறைகள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில், நான்கு அமைச்சர்களை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையானது அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்ற குற்றச்சாட்டை டோமினிக் லாவ் திட்டவட்டமாக மறுத்தார். மாறாக, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவிகளைத் தகுதியுள்ளவர்கள் வகிக்க வேண்டும். அதன் காரணமாக அரசாங்கத்தால் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான சேவையை வழங்க முடியும் என்றார் அவர்.

“எங்களிடம் எந்தவோர் அரசியல் திட்டமும் இல்லை. அமைச்சர்களின் செயல்திறன் குறித்தே நாங்கள் கருத்துரைத்தோம். நாங்கள் மக்களுக்காகவே குரல் கொடுக்கிறோம்” என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

1 COMMENT

  1. புதிய கார் ஆய்வுக்கு ஒரு நிறுவனம் 500 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக படித்த ஞாபகம்.

Comments are closed.