புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இந்திய மாணவர்களுக்கு வெ. 15 லட்சம் உபகாரச் சம்பளம்! ஹெல்ப் பல்கலை-கேஎல்எஸ்ஐசிசிஐ உடன்படிக்கை கையெழுத்து
சமூகம்

இந்திய மாணவர்களுக்கு வெ. 15 லட்சம் உபகாரச் சம்பளம்! ஹெல்ப் பல்கலை-கேஎல்எஸ்ஐசிசிஐ உடன்படிக்கை கையெழுத்து

கோலாலம்பூர், ஜூலை 24-

வசதி குறைந்த இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்களின் உயர்கல்வியைத் தொடர ஏதுவாக ஹெல்ப் பல்கலைக்கழகம் 15 லட்சம் வெள்ளி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு  முந்தைய படிப்பு, ஏ லெவல், சான்றிதழ், டிப்ளோமா, பட்டப் படிப்பு என இந்திய மாணவர்கள் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் தங்களின் மேற்கல்வியைத் தொடரலாம் என இப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் பாவுல் டி. எச். சான் தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் மிகவு‌ம் கெட்டிக்காரர்கள். உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும் இவர்களின் திறமை போற்றத்தக்க வகையில் உள்ளது என்று இங்கு ஹெல்ப் பல்கலைக்கழகத்திற்கும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கும் (கேஎல்எஸ்ஐசிசிஐ) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

“உயர் தொழில்நுட்ப ஆற்றல், தலைமைத்துவ ஆற்றல் என இந்திய மாணவர்களிடம் அதிக திறமைகள் உள்ளன. இவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்கை ஆற்றி வருகின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்துடன் இணைந்து நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம் ” என்றார் பாவுல்.

பி 40 பிரிவினரை மேம்பாட்டிற்கு இட்டுச் செல்வதற்கு கல்வி ஒன்றே பிரதானம். இதனைக் கருத்தில் கொண்டே ஹெல்ப் பல்கலைக்கழகத்தின் இந்த உன்னத பணிக்கு அனைத்து வகையிலும் தோள் கொடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக கேஎல்எஸ்ஐசிசிஐ தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய இளைஞர்களைத் தயார்படுத்துவதற்கு ஹெல்ப் பல்கலைக்கழகம் இந்த அற்புத வாய்ப்பை இவர்களுக்காக வழங்கியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ஹெல்ப் பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் பாவுல் டி. எச்.சானும் கேஎல்எஸ்ஐசிசிஐ சார்பில் டத்தோ ராமநாதனும் கையெழுத்திட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன