கோலாலம்பூர், ஜூலை 24-

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் 9 -ஆவது ஆடிப் பூரம் திருவிழாவை  ஜூலை 25 ( வியாழன் ) முதல் நடத்தவுள்ளது. கொடியேற்றத்துடன் துவங்கும் ஆடிப் பூரம் திருவிழா உற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறும். 10 -ஆவது நாள் உற்சவத்தில் பூச்சொரிதல் விழாவும் சிறப்பாக நடைபெறும். ஆடிப் பூரம் திருவிழா உற்சவத்தின் உபயம் காலை மாலை ஆகிய இருவேளைகளில் நடைபெறும் என்று தேவஸ்தானத்தின் பொதுத்தொடர்பு இயக்குனர் திரு. சிவக்குமார் தெரிவித்தார்.

காலை மணி 6.00-க்கு துவங்கும் காலை நேர உபயத்தில் 108 சங்காபிஷேகம், கும்ப பூஜை மற்றும் அபிஷேகங்களும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். அதேபோல் மாலை மணி 3.45-க்கு துவங்கும் மாலை வேளை உபயத்திலும் 108 சங்காபிஷேகம், கும்ப பூஜை மற்றும் அபிஷேகங்களும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.

அதுமட்டுமின்றி மாலை நேர உபயத்தில் உற்சவமூர்த்தியான அம்பாளை பல்லக்கில் ஏற்றி உள்வீதி உலா வருதலும் இடம்பெறும் என்று திரு. சிவக்குமார் விளக்கினார். ஆகஸ்ட் 3, சனிக்கிழமை ஆடிப் பூரம் உற்சவத்தின் 10-வது நாள், ஆடிப் பூரம் திருவிழாவாகும். காலை மாலை நடைபெறும் 108 சங்காபிஷேகம், கும்ப பூஜை மற்றும் அபிஷேகங்களுக்குப் பின் பூச்சொரிதல் விழா நடைபெறும்.

திருமணமான பெண்களும், திருமணமாகாத குமரிப்பெண்களும் அழகிய மலர்களை ஏந்தி கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக வந்து கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரிஅம்மனாக வீற்றிருந்து நம் அனைவரையும் இரட்சிக்கும் அன்னைக்கு பூக்களால் ஆராதனை நடைபெறும்.

இந்த 10 நாள் உற்சவத்தில் அணைத்து பக்தர்களும் கலந்துக் கொண்டு அன்னையின் ஆசி பெற தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் அறங்காவலர்களும் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றனர்.