கோலாலம்பூர், ஜூலை 31-

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது.

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் 50க்கு 50 என்ற நிலையில் இணக்கம் காணப்பட்டதாக வெளியான தகவலை அவ்விரு கட்சிகளின் தலைமை செயலாளர்களான டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான் மறுத்தனர்.

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான சாசனத்தை இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த ஆலோசனைக் குழுக்கள் அங்கீகரித்துள்ளன. ஆனால் தொகுதிப் பங்கீடு உடன்பாடு குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

செப்டம்பர் 14ஆம் தேதி அம்னோ – பாஸ் சாசனம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.