உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு..!

0
2

இந்தியாவின் வடமாநிலங்களில் பெய்து வரும் கனத்த மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு கண்டிருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவில் ஒருவாரமாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது.

ஆயிரத்து 551 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 27,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 58 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்ததை அடுத்து நேற்று பிற்பகல் முதல் விமான சேவை தொடங்கியுள்ளது.

நீலாம்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கவளப்பாராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மலப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய ராகுல்காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.