பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபிரவேசம் செய்துள்ள வனிதா விருந்தினரா..? அல்லது விஜய்.டிவியின் கைப்பாவையா என்ற கேள்வி பிக்பாஸ் பார்க்கும் அத்தனை பேருக்கும் தோன்றி இருக்கிறது. உண்மைகளைப் போட்டு உடைத்துத் தைரியமாக நியாயமாக அவர் பேசுவது போல இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு கள்ளாட்டமும் ஒளிந்திருப்பதை மறுக்க முடியவில்லை.

வனிதா போன்ற ஒரு பெண் தமது வாய் வார்த்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று விஜய்.டிவி சேனல் உணர்ந்து தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரிக்க முயற்சித்த அதேவேளையில், பிக்பாஸ் வெற்றியாளர் பட்டத்தை ஒரு வெளிநாட்டு போட்டியாளர் வென்றுவிடக் கூடாது என்பதில் அது குறியாக இருப்பதும் வெட்ட வெளிச்சமானது.

வனிதாவின் மூலம் பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட நினைக்கும்  விஜய் டிவி, நேற்றைய எபிசோட்டில் வனிதா தர்ஷன் , லாஸ்லியா மற்றும் முகேனை குறி வைத்துக் கேள்வி கேட்கும்போதும் விமர்ச்சிக்கும் போதும், ஒரு வியூகத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள போட்டியாளர்களைக் குறி வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தமிழ்பொண்ணு என்ற வார்த்தையை அன்று தெரியாமல் சொல்லிவிட்ட மதுமிதாவை ஒரு பாடாய் படுத்திய வனிதா இன்று மீண்டும் அதே வார்த்தையைச் சொல்லி மதுவை உசுப்பி விடுவதன் காரணம் என்ன?

வீட்டில் உள்ளவர்கள் விட்டுக்கொடுக்கும் பிச்சை உனக்குத் தேவையா என்று தர்ஷனை சிந்திப்பது போலக் கேள்வி கேட்டாலும் அதில் அவரைப் பின்னுக்குள்ள தள்ள வேண்டும் என்ற எண்ணம் தென்படுகிறதே?

மக்கள் மத்தியில் லாஸ்லியாவுக்கு இருந்த இடம் கொஞ்சம் இறக்கப்பட்டிருந்தாலும் வனிதா, மீரா மற்றும் ஷாக்சி அளவுக்கு மக்கள் அவரை வெறுக்கவில்லை. அப்படி இருக்க, லாஸ்லியாவை அருகில் அழைக்கும் வனிதா, அவரிடமும் கோபத்தைக் காட்டுவதுடன் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் அவரைத் தப்பாகச் சித்தரிப்பதன் அவசியம் என்ன?

முகேன் – அபிராமி விவகாரத்தில் தப்பு எங்கே உள்ளது என்பது உலகம் அறிந்த விசயம். ஆனால் இவ்விவகாரத்தில் புண்ணியத்தை அபி தலையில் கட்டி பாவத்தை முகேன் மீது திருப்பவது எந்த வகையில் நியாயம்?

முகேன் யாரைக் காதலித்தால் வனிதாவுக்கு என்ன? தாம் யார் என்பதை, ஏற்கனவே கடந்த 50 நாட்களில் முகேன் கூறிவிட்ட போதிலும் மீண்டும் அவரை ஏன் வனிதா வம்புக்கு இழுத்து மாபாதகம் செய்ததுபோல வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகின்றார்?

சேரன் வெற்றிப் பெறுவதற்கு அவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் போது அதனை ஏன் அவர் மகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நியாயம் பேசுவது போல் கிளப்பிவிட சேரன் மேல் திடீரென்று அத்தனை பாசமா?

இப்படி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் நிறைய விசயங்கள் இங்கு புலப்படுகின்றன. சில குறை நிறைகள் இருந்தாலும், தர்ஷன் , லாஸ்லியா மற்றும் முகேன் ஆகிய மூவரும் மக்களின் பார்வைக்குப் பக்கத்தில் கொஞ்சம் பத்திரமாய் இருக்கின்றனர்.

இதனை உடைக்க வேண்டும் என்றால் மற்ற போட்டியாளர்களை முடுக்கி விட வேண்டும். டி.ஆர்.பியும் எகிற வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் வெற்றி பெற வேண்டும், அதனை நேரடியாகச் செய்ய முடியாததால் வனிதாவுக்கு இங்குப் புது அவதாரம் பூசப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டிருக்கிறார் என்பது அநேகன் உட்பட இன்னும் பல சமுக வலைத்தளங்கள் கணித்திருக்கின்றன.

இந்தக் கணிப்பு குறித்து உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்..