ஈப்போ, ஆக 18-

ஈப்போ, கம்போங் டூசுன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சிலைகளை இந்தோனேசிய ஆடவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பாராமல் நடந்த இச்சம்பவத்தை நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அளவிற்கு பெரிதுபடுத்த வேண்டாம் என்று துணை சுகாதார அமைச்சரும் கோப்பேங் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் லீ பூன் சே வலியுறுத்தினார்.

ஆலயத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் நேரில் வந்து பார்த்ததாகவும் இவ்விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் மேல் விசாரணை மேற்கொள்ள மக்கள் வழிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட அந்த இந்தோனேசிய ஆடவன் பயண ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி நாட்டினுள் நுழைந்தவன் என்று விசாரணையில் தெரிய வந்ததாக லீ பூன் சே தெரிவித்தார்.

இன்று ஆலயத்திற்கு வந்து நிலவரத்தை நேரில் கண்டறிந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மாநில முதலீடு, தொழில் மற்றும் மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடினும் உடன் வந்திருந்தார்.

ஆலயம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு மலாய்க்காரர்தான் இச்சம்பவம் குறித்து ஆலய நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார் என்று லீ தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து டத்தோஸ்ரீ முகமட் நீசார் கூறுகையில், ஈப்போவில் பழமையான ஆலயமாக இது திகழ்கிறது. இப்படியொரு சம்பவம் இங்கு நிகழ்ந்தது வருத்தத்தை அளிப்பதாகவும் இதற்கு முன் இந்த மாதிரி சம்பவம் இந்த ஆலயத்தில் நிகழ்ந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும். யாரும் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் யூகங்களை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட அந்த இந்தோனேசிய ஆடவன் விசாரணைக்காக 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறான். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 295, 427, 448 மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழை சட்டம் பிரிவு 6(3)இன் கீழ் விசாரணை செய்யப்படும் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.