பார்சிலோனா முன் வைத்த தொகையை நிராகரித்த பி.எஸ்.ஜி !

0
17

பாரிஸ், ஆகஸ்ட்.21-

பிரேசிலின் உச்ச நட்சத்திரம் நெய்மாரை வாங்குவதற்காக பார்சிலோனா முன் வைத்த 19 கோடி ஈரோ டாலரை, பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் நிராகரித்துள்ளது. முதல் கட்டமாக 4 கோடி டாலரை , தற்காலிக ஒப்பந்தத்திலும், பின்னர் நிரந்தரமாக அவரின் சேவையைப் பெறுவதற்கு 15 கோடி டாலரை வழங்குவதற்கும் பார்சிலோனா முன் வந்துள்ளது.

இருப்பினும் பார்சிலோனா வழங்கிய தொகையை, பாரிஸ் செயின் ஜெர்மைன் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் பார்சிலோனா, 17 கோடி டாலரை மட்டுமே வழங்குவதற்கு தயாராக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.2017 ஆம் ஆண்டில் நெய்மாரை வாங்குவதற்காக, பாரிஸ் செயின் ஜெர்மைன் 22 கோடி டாலரை பார்சிலோனாவுக்கு வழங்கியது.

மீண்டும் அந்த தொகைக்கு ஈடான ஒரு தொகையைப் பெறுவதற்கு பாரிஸ் செயின் ஜெர்மைன் திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், நெய்மாரின்  நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள பாரிஸ் செயின் ஜெர்மைன் உரிமையாளர்கள் கோடை காலத்தில் அவரை விற்க முடிவு செய்துள்ளனர்.

நெய்மாரை வாங்க ஒரே முறை பார்சிலோனாவால் மொத்த தொகையை வழங்க இயலாது என்று கூறப்படுகிறது.எனவே கட்டம் கட்டமாக, பார்சிலோனா அந்த தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பார்சிலோனாவில் இருந்து கோத்தின்ஹோவைக் கொண்டு வர பாரிஸ் செயின் ஜெர்மைன் திட்டமிட்டிருந்தது. எனினும் தற்காலிக ஒப்பந்தத்தில் கோத்தின்ஹோ, ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் கிளப்பில் இணைந்ததால், நெய்மாரை பார்சிலோனாவுக்கு விட்டுக் கொடுக்கவும் பாரிஸ் செயின் ஜெர்மைன் அதிகம் யோசிப்பதாக கூறப்படுகிறது.