ஷா அலாம். ஆக 21-

சீபில்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது தீயணைப்பு வீரர்  முகமட் அடிப்  காசிம் மரணம் அடைந்தார். அதன் காரணத்தை கண்டறிவதற்காக  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நீதிமன்றத்தின் முடிவு அடுத்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி தெரியும். ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த தேதியை  நிர்ணயித்தது.

கடந்த ஜூலை 24ஆம் தேதி இந்த மரண விசாரணை ஒரு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இனியும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதால்  மரண விசாரணை நீதிமன்ற தலைவர் ரோஃபியா முகமட்  இந்த விசாரணையின் முடிவுக்கான தேதியை அறிவித்தார்.

அனைத்து தரப்பு சாட்சிகளை முழுமையாக பரிசீலித்த பின்னர் மரண விசாரணையை இனியும் தொடர்வதற்கான அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணியளவில் இந்த மரண விசாரணைக்கான முடிவை நீதிமன்றம் தெரிவிக்கும் என அவர் கூறினார்.

முகமட் அடிப்பின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட மரண விசாரணை 41 நாள் நடைபெற்றது. நிபுணர்கள் உட்பட 30 பேர் இந்த விசாரணையின்போது சாட்சிக்காக அழைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சீபில்டு ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் அடிப் காயம் அடைந்தார். 21 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 17ஆம் தேதி கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் மரணமடைந்தார்.

இரண்டு விதமான முரண்பட்ட தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவரது மரணத்திற்கான  காரணத்தை கண்டறிவதற்காக மரண விசாரணை நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. வாகனத்தில்  மோதப்பட்டதால் அடிப் இறந்தார் என்ற ஒரு தகவலும் கலவரக்காரர்கள்  தாக்கப்பட்டதால் அவர் இறந்தார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகின.