செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது!

கிள்ளான், ஆகஸ்ட் 22-

கிள்ளான் ஜோஹான் செத்தியா அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் இப்போது என்னவானது. 2017ஆம் ஆண்டுச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ஆலயத்திற்கு அவ்வாலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு மிக அருகாமையில் 20,000 சதுர அடி நிலம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது என இவ்வாலயத்தின் தலைவர் சிவகாந்தன் தேவரஞ்சன் தெரிவித்தார்.

அறிக்கையில் மட்டுமே அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த நிலத்தை எங்களது ஆலயத்த்தின் பேரில் பட்டா பெறுவதற்குக் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நில அலுவலகம், மந்திரி பெசார் அலுவலகம் என அனைத்தையும் ஏறி இறங்கி விட்டோம். ஆனால் ஆலயத்திற்கான நிலப்பட்டா இதுநாள் வரை வழங்கப்படவில்லை எனச் சிவகாந்தான் சாடினார்.

இந்நிலையில் திடீரென அந்த நிலத்தில் PERTUBUHAN PENGANUT BUDDHA CI EN LIN என்று எழுத்தப்பட்ட ஒரு பதாகை நிறுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை இந்த நிலம் எங்கள் ஆலயத்திற்குத் தான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களுக்கு இது தலையில் இடி விழுந்ததைப் போல ஆனது.

இவ்விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையில் தங்களுக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இதில் என்ன நடந்தது என்பதைக் கணபதி ராவ் முழுமையாக விசாரித்து அறிவிக்க வேண்டுமெனச் சிவகாந்தன் வலியுறுத்தினார்.

எங்கள் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எப்படி அமைப்பிற்குக் கைமாறியது? அதேபோல் இதே கிள்ளான் கெனாரி கார்டன் குடியிருப்புப் பகுதியில் அன்னப்பூரணி என்ற அறவாரியத்திற்கு மற்றொரு நிலமும் வழங்கப்பட்டுள்ளது இது எப்படி நியாயமாகும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

அன்னப்பூரணி என்ற அறவாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலம்…

கெனாரி கார்டன் சுற்றுவட்டாரத்தில் எங்களது ஆலயம் உட்படக் கம்போங் ஆயர் ஹித்தாம் மாரியம்மன் ஆலயம், கம்போங் ஆயர் ஹித்தாம் முனீஸ்வரர் ஆலயம் என 3 வெவ்வேறு ஆலயங்கள் உண்டு.

இந்த 3 ஆலயங்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயங்கள். இங்குள்ளவர்களுக்கு முதலில் நிலம் வழங்காமல், அன்னப்பூரணி அறவாரியத்திற்கு நிலம் வழங்க வேண்டிய அவசியம் என்ன?

அந்த அறவாரியம் தோற்றுவிக்கப்பட்ட 3 மாதங்களில் நிலம் வழங்கப்பட்டதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இயக்கங்களுக்கு நிலம் வழங்க மாட்டோம் என்று கூறிய மாநில அரசாங்கம் புதிய அறவாரியத்திற்கு எப்படி நிலம் வழங்கியது எனச் சிவகாந்தான் கேட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் பதிலளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இதன் தொடர்பில் கணபதிராவிடம் கேட்டபோது, திங்கட்கிழமை இதுகுறித்த முழுமையான விளக்கத்தை வழங்குவதாக அநேகனிடம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன