கோலாலம்பூர், ஆக. 24-

தாய்மொழிப்பள்ளிகளில் ஜாவி வேண்டாம் என்ற எதிர்ப்பை கடுமையாக பிரதிபலித்த புரட்சி பேரணியின் எதிரொலியாக அதன் ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரணிக்கு பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட உமாகாந்தனையும் மலேசிய சீன கல்வி கற்றவர்கள் சங்கத்தின் தலைவர் டான் என்பவரையும் தற்போது கைது செய்திருப்பதாக புரட்சி செயற்குழுவின் வழக்கறிஞர் தினேஷ் முத்தல் தெரிவித்தார்.

வெறும் 10 நிமிடத்திற்கு மட்டுமே புரட்சி பேரணியை நடத்த வேண்டும் என்று போலீஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க கூட்டம் 10 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. அதோடு அனைவரும் அமைதியாக கலைந்து போகும் படி கூறிய உமாகாந்தன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி காவல் நிலையத்திற்குச் சென்றார்.

ஆனால் காவல் நிலையத்தில் திடிரென அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விதிகளை மீறாமல் போலீஸாரின் உத்தரவின் படி அனைத்துமே நடத்தப்பட்ட வேளையில் ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரியவில்லை.

பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் தற்போது இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின்னரே எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்று போலீஸார் கூறியதாக தினேஷ் முத்தல் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெற்ற இந்தப் புரட்சி பேரணியில் 1500 பேர் கலந்து கொண்டனர்.