கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

மஇகாவின் பேராளர் மாநாடு நேற்று மிக விமர்சையாக நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உரையாற்றும் போது, புத்ரி பிரிவுத் தலைவி ஹேமலதா எனக் குறிப்பிட்டார். அப்போது அனைவருக்கும் ஒரே கேள்விதான் எழுந்தது.

புத்ரி தலைவியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பொன். கோகிலத்தின் நிலை என்ன? அவர் புத்ரி பிரிவுத் தலைவி பதவிலிருந்து நீக்கப்பட்டாரா? அல்லது விலகிக் கொண்டாரா என்பதுதான்.

முன்னதாக அவர் இன்றுதான் தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னல் பண்பலையின் முன்னாள் அறிப்பாளரான பொன் கோகிலம் மஇகாவுடன் இணைந்து பணியாற்றினார். 2018 அக்டோபர் மாதம் நடந்த புத்ரி பதவிக்கான தேர்தலில் பொன் கோகிலம் தலைவர் பதவிக்கு சக்தி என்ற பராசக்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு மஇகாவில் அனைவருக்கும் நன்கு அறிமுகமாக ஷாலினியை இறுதி நேரத்தில் வீழ்த்தி, ஹேமலதா வெற்றிப் பெற்றார்.

இந்தத் தேர்தலில் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் பொன் கோகிலத்திற்கும் ஹேமலதாவிற்கும் முழுமையான ஆதரவு வழங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பொன். கோகிலம் திடீரெனப் புத்ரி தலைவி பதவியிலிருந்து விலகியதற்கு என்ன காரணமென்பதை அநேகன் அலசியது.

ஆர்டிஎம்மில் தொடர்ந்து பணி புரியும் பொன் கோகிலம் எதிர்க்கட்சியாக இருக்கும் மஇகாவுடன் இணைந்து பணியாற்றுவதற்குச் சிக்கல்கள் எழ தொடங்கியுள்ளன. அதனால்தான் புத்ரி மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் கசிந்தன.

அப்போது புத்ரி தலைவி உரையை ஹேமலதா நிகழ்த்தினார். மஇகா பேராளர் மாநாட்டில் பொன் கோகிலம் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஹேமலதா புத்ரி பிரிவுத் தலைவர் என டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைத்தார்.

முன்னதாக அண்மையில் நடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் பொன் கோகிலத்திற்கு இவ்வளவு பெரிய சிக்கல் இருக்குமென்றால் சக்தி வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பேசப்பட்டதாகவும் தெரிகின்றது. ஆனால் அடுத்தக் கட்சித் தேர்தல் வரும் வரை ஹேமலதா தான் புத்ரி பிரிவுத் இடைக்கால தலைவி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.