திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பத்துமலையில் PT3 மாணவர்களுக்குச் சிறப்புக் கருத்தரங்கம்!
மற்றவை

பத்துமலையில் PT3 மாணவர்களுக்குச் சிறப்புக் கருத்தரங்கம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-

கடந்த சனிக்கிழமை பத்துமலையில் நடைபெற்ற PT3 மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கில் சுமார் 90 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். இந்தக் கருத்தரங்கு டத்தோ ஆர். நடராஜா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

” சிறந்த கல்வியை நோக்கி ” என்ற கருப்பொருளோடு இந்தக் கருத்தரங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் வைகாசி விசாகப் பயத்தார்களின் கல்விக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கின் ஆலோசகரும் வைகாசி விசாக உபயத்தின் நாட்டாமையும் ஆகிய திரு. ஆறுமுகம் முருகேசு அவர்கள், ” இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம் அடுத்த மாதம் PT3 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குத் தேர்வை எப்படி அணுகுவது, தேர்வு எழுதும் பல்வேறு நுணுக்கங்கள் போன்றவற்றை அளித்துத் தேர்வுக்குத் தயார் படுத்துவதே ஆகும்”, என்று கூறினார்.

சனிக்கிழமை காலையில் இந்தக் கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த தேவஸ்தானத்தின் செயலாளர் திரு. சேதுபதி அவர்கள், மாணவர்கள் தங்களால் முடிந்தளவு சிறந்த முறையில் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில் PT3 தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்கள் அவர்களின் மேற்கல்வியைக் கணிதம் மற்றும் அறிவியல் துறையில் தொடர முடியும் என்றார். இவ்வேளையில் தேவஸ்தானம் எப்பொழுதும் இந்தியர்களின் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதையும் சுட்டிக் காட்டினார்.

தலைசிறந்த பயிற்சியாளர்களால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. கிள்ளான் வெஸ்லி இடைநிலைப்பள்ளியின் மலாய் மொழித் துறையின் தலைவர் ஆசிரியர் திரு அரவிந்த் மலாய் மொழியையும், அறிவியல் பாடத்தைத் திரு ஆண்டனியும், முன்னாள் அனைத்துலகப் பள்ளி ஆசிரியரான திருமதி. டல்விண்டிர் கோர் ஆங்கிலப் பாடத்தையும் மற்றும் திரு. சர்வேஷ் கணித பாடத்தையும் வழி நடத்தினர்.

வைகாசி விசாக உபயத்தின் கல்விக் குழு இதே போல் கடந்த மாதம் 80 யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு வெற்றிக்கரமாகக் கருத்தரங்கை நடத்தியுள்ளனர். அடுத்த மாதம் எஸ்பிஎம் மாணவர்களுக்கான கருத்தரங்கையும் நடத்தவிருக்கின்றனர். இவர்களுக்குத் தேவஸ்தானம் முழு அளவிலான ஆதரவினை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும். வைகாசி விசாக உபயத்தைச் சேர்ந்த திரு ஆறுமுகம் முருகேசு, திருக் கே.ஜெயகுமார், திரு ஜி.சிவதாஸ் ஆகியோரும் கருத்தரங்கில் கலந்து ஆதரவு வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன