வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ் நேசன் பணியாளர்களை அமைச்சர் குலசேகரன் சந்தித்தார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ் நேசன் பணியாளர்களை அமைச்சர் குலசேகரன் சந்தித்தார்

புத்ராஜெயா ஆக. 27-

வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழ் நேசனின் முன்னாள் பணியாளர்களை மனிதவள அமைச்சர் வழக்கறிஞர் எம்.குலசேகரன் சந்தித்தார். மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் நேசன் நடவடிக்கை குழுவின் தலைவர் எஸ்.எம்.சுந்தர், செயலாளர் தயாளன் சண்முகம்,  ரவி முனியாண்டி,  கே.மணி மற்றும் தமிழ் நேசனின் முன்னாள் ஆசிரியர் கே.பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் குலசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் மனிதவள அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மனிதவள அமைச்சின்  தொழிலாளர் அலுவலகத்தில் புகார் செய்திருப்பதாகவும் இந்தப் புகார் தொடர்பான அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் குலசேகரன் விளக்கம் பெற்றார்.

இனியும் இந்த பிரச்சினைக்கு தாமதம் ஏற்படுத்தாமல் அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்படி தொழிலாளர் அதிகாரிகளுக்கு குலசேகரன் பணித்தார். சொக்சோ விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் தகுதி பெற்றவர்களுக்கு  சொக்சோவின் காப்புறுதி திட்ட அனுகூலங்களை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இ.பி.எப்  தொகையை நிர்வாகம் இன்னும் செலுத்தவில்லை என்றாலும் அதற்கான நடவடிக்கையில் இ.பி.எப் அதிகாரிகள் முனைப்பு காட்டுவார்கள் என்பதையும் குலசேகரன் விளக்கம் அளித்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் உறுதி வழங்கியபடி மார்ச் மாத சம்பளத்தை இன்னும் வழங்காமல் இருப்பது குறித்தும் குலசேகரன் தமது ஏமாற்றத்தை தெரிவித்துக்கொண்டார்.

எனினும் இந்த பிரச்சினை குறித்து தமிழ் நேசன் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ வேள்பாரியுடன்  பேச்சு நடத்துவதற்கு தாம் முயற்சியை மேற்கொள்ள போவதாகவும் குலசேகரன் கூறினார்.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட காப்புறுதி பணம் செலுத்தப்படாததால்  காப்புறுதித் திட்டம் காலாவதியாகி விட்டது குறித்தும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் குலசேகரனிடம் தெரிவித்தனர். அதேபோன்று வருமான வரித்துறைக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணமும் செலுத்தப்படாதது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

முதல் கட்டமாக சொக்சோ காப்புறுதித் திட்ட இழப்பீடு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கையிலும் தமது அமைச்சு ஈடுபடும் என குலசேகரன் உறுதியளித்தார்.

1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 95 ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த உலகின் மூத்த தமிழ் நாளேடான தமிழ்நேசன் இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.பத்திரிக்கை நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும்  தொழிலாளர்களுக்கு மார்ச் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

அதோடு எந்த ஒரு இழப்பீடின்றி திடீரென வேலை நிறுத்தப்பட்டதால் தமிழ்நேசன் தொழிலாளர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மனிதவள அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும் என்றும் தமிழ்நேசன் முன்னாள் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன