மின்னல் எப்.எம்மின்  தேசிய தின அதிரடிப் பயணம்

0
3

கோலாலம்பூர், ஆக 29-

மின்னல் எப்.எம் வானொலி தேசிய தினத்தை நேயர்களோடு கொண்டாடும் வகையில் அதிரடிப் பயணமொன்றை ஏற்பாடு செய்தது.   நேற்று புதன்கிழமை, நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கோலாலம்பூர் லெபோ அம்பாங் பகுதியில் உள்ளூர்  கலைஞர்களோடும் அறிவிப்பாளர்களோடும் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

நம் நாட்டின் பிரபலக் கலைஞர்களான டேனிஷ், விக்ரன்,  நிலா, யுவராஜ் கிருஷ்ணசாமி, இயக்குனர் கவிநந்தன், குமரேஷ் கமலகண்ணன், அகல்யா மணியம், கல்பனா ஸ்ரீ, இயக்குனர் மதன், ஜெயசுதா ஆகியோர் கலந்து  கொண்டு  பாடல்களைப் பாடி நேயர்களை மகிழ்வித்தனர்.

போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு தேசியக் கொடிகளையும் பரிசுகளையும் மின்னல் எப்.எம் வழங்கியது. மின்னல் வானொலிக்கும் நேயர்களுக்கும் இடையிலான அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகவும்  இது அமைந்தது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மண்ணின் நட்சத்திரம் நிகழ்ச்சி பிற்பகல் மணி 12 தொடக்கம் 2 மணி வரை மின்னலில் ஒலியேறுகிறது.

அந்நிகழ்ச்சியில் இதுவரை பங்கெடுத்த கலைஞர்களுள் அதிரடிப் பயணத்தில் பங்கு கொண்டவர்களும் அடங்குவர். அதே சமயம்,   மின்னல் எப்.எம் 11ஆவது ஆண்டாக இம்முறையும் தேசிய தினத்தன்று நாள் முழுக்க மலேசிய பாடல்களை ஒலிப்பரப்புவதில் பெருமை கொள்கிறது. நேயர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மின்னலின் தேசிய தின வாழ்த்துகள். மலேசியாவை நேசிப்போம், ஒற்றுமையைக் கடைபிடிப்போம்.