மாநிலந்தோறும் மனநல ஆலோசனை மன்றம்-வேதமூர்த்தி பரிந்துரை

0
6

நீலாய், ஆக.31-

மணவிலக்குப் பிரச்னை, சமுதாயத்தில் பெரும் மருட்டலாக மாறிவருகிறது. அண்மைக் காலத்தில் இந்தப் போக்கு பொதுவாக அனைத்து இன மக்களிடமும் காணப்பட்டாலும் இந்திய சமுதாயத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய வகையில் மணமுறிவு பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

நீலாய், மணிப்பால் பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலேசிய இந்திய ஆசிரியர் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக் கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மணமுறிவு என்பது கணவன்-மனைவி ஆகிய இருவர் மட்டும் சம்பந்தப்பட்ட சிக்கல் அல்ல; மாறாக சமுதாயத்தைப் பேரளவில் பாதிக்கக்கூடியது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பெற்றோர் பிரிய நேரிட்டால், அவர்களது பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. அப்பா, அம்மா இருவரின் யாரின் பக்கம் நிறபது என்பதில் தடுமாறும் பிள்ளைகளின் மனநலம், கல்வி, சுகாதாரம், உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களும் கேள்விக்குறியாக அவர்களின் எதிர்காலமே கவலைக்குரியதாகி விடுகிறது. இது, சமுதாயத்திற்கு பாதகமாக பின்விளைவை ஏற்படுத்தும்.

திருமண முன் பயிற்சியை பரந்த அளவில் நடத்தினால், இதற்கெல்லாம் நல்ல தீர்வைக் காணலாம். இதன் தொடர்பில்,  துணைப் பிரதமரும் மகளிர் குடும்ப நலத் துறை அமைச்சருமான  டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசீசாவுடன் மலேசிய இந்திய நெறியுரைஞர் இயக்கத்தினர் சந்தித்து ஆலோசனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

கல்வி அமைச்சின் ஆதரவிலும் மலேசியத் தமிழ்ச் சமூக மனநல ஆலோசகர் மன்றம் மற்றும் மணிப்பால் பன்னாட்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பிலும் ஆகஸ்ட் 29-ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் எம்.ஏ.பி. கட்சியின் நிறுவனத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்வி-பதில் அங்கத்தின்வழி சமூக நலம் சார்ந்த வினாக்களுக்கு பதில் அளித்தார்.

மலேசிய இந்திய நெறியுரைஞர் அமைப்பின் தலைவர் ஆ.கணேசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நல்ல நிகழ்ச்சியில் மேலும் பேசிய அமைச்சர், இந்திய சமுதாய நலம் கருதி மாநிலந்தோறும் மனநல ஆலோசனை மன்றம் அமைப்பது குறித்தும் ஆலோசனை தெரிவித்தார்; ஆதரவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இருநூறுக்கும் மேற்பட்ட நெறியுரையாளர்கள் கலந்து கொண்டனர்.