கோலாலம்பூர்,  செப் 1 –

தனியார்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கோலா எனப்படும் வாழ்க்கை செலவின படி தொகை 500 வெள்ளி அல்லது அதற்கும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டியு.சி) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

அதோடு கட்டாய ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆலோசனைகள் அமல்படுத்த வேண்டுமென மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் செயலாளர் ஜே. சோலமோன் வலியுறுத்தினார்.

எதிர்வரும் அக்டோபர் 11-ஆம் தேதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோலா தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென ஆகஸ்ட் 26-ம் தேதி அரசாங்கத்திற்கு வழங்கிய கோரிக்கையில் எம்.டி .யு.சி கேட்டுக்கொண்டதாகவும் சோலமோன் கூறினார்.

வாழ்க்கைச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை சமாளிப்பதற்கு கோலா தொகையை வழங்குவதை இனியும் அரசாங்கம் ஒத்திப் போடக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறைந்த வருமானத்தில் சமாளிக்க முடியாமல் இருக்கின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு எம் .டி .யு.சி நெருக்குதல் கொடுக்க வில்லை . ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கை செலவினத்தை சமாளிக்கும் வகையில் அவர்களது வருமானம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சோலமோன் தெரிவித்தார்.

மேலும் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும். குறைந்த சம்பளத்தில் இப்போதைய ஓய்வு பெறும் வயதில் தொழிலாளர்களுக்கு போதுமான சேமிப்பு இல்லாமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆயுள் காலம் 80 வயதாக அதிகரித்து வருவதால் கட்டாய ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் என சோலமோன் கேட்டுக்கொண்டார்.

இதன்வழி தொழிலாளர்களின் இ.பி.எஃப் சந்தா தொகை போதுமான அளவுக்கு இருக்கும் என்பதோடு அவர்கள் வயதான காலத்தில் தங்களது குடும்பத்தினரை அதிகமாக நம்பியிருப்பதையும் தவிர்க்க முடியும் என வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சோலமோன் கேட்டுக்கொண்டார்.