பிக்பாஸ் வீட்டைக் கடந்து, சில தினங்களாக மீடியா கண்கள் அதன் போட்டியாளர் கவினின் வீட்டை சுற்றி வருகின்றனர். ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள், மறுபக்கம் விமர்சனங்கள் என்று தொடர்ந்து, கவின் மற்றும் அவரின் குடும்பத்தைப் பற்றிய செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதன் உண்மை நிலவரம் என்னவாக இருக்கும் என்று அநேகன் அதன் வாசகர்களுக்காக மேற்கொண்ட ஓர் அலசல் இது.

பின்னணியும் குற்றச்சாட்டும் :

திருச்சியைச் சேர்ந்தவர் பிக்பாஸ் புகழ் கவின்ராஜ். இவரது தாய் ராஜலட்சுமி என்கிற ராஜி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயேந்தி, ராணி ஆகியோர் சேர்ந்து கூட்டாக ஏலச்சீட்டு நடத்தியதாகவும் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித்தராமல் கடந்த 2007ஆம் ஆண்டு மொத்தமாகத் தலைமறைவாகிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், கிட்டத்தட்ட 34 பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்று திருச்சி குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 31 சாட்சிகள் சாட்சியம் அளிக்கப்பட்டு இருப்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உண்மையில் நடந்தது என்ன? கவின் நண்பர்கள் :

கவினின் தாய் ராஜலட்சுமி கூட்டாக ஏலச்சீட்டு நடத்தி இருக்கின்றார். அது சீரான முறையில் சென்றுக்கொண்டிருக்க, அதில் ‘பாட்னராக’ ஒருவர் சேர்ந்திருக்கின்றார். உள்ளுக்குள் வந்தவர் கையாடல் செய்து கவினின் தாயாரையும் சேர்த்து ஏமாற்றித் தலைமறைவாகி இருக்கின்றார். இந்த சூழலில் பணம் போட்டவர்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டுய நிலையில் கவினின் குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் பணம் இல்லாத காரணத்தால்,  படிக்கும்காலத்திலும் கவின் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கின்றார்.

சொந்த பந்தங்கள் கைவிட. நட்பு மட்டுமே உண்மை தெரிந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இதனைப் பிக்பாஸ் வீட்டில் கவினும் கூறியிருந்தார். சொந்த ஊரான திருச்சியில் இருந்து வெளியேறி சென்னை வந்து சேர்ந்திருக்கின்றார்.

நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்த வீட்டை மீட்டெடுக்க கவின் பணத்துக்கு நிறைய வேலைகள் செய்தார்.சினிமாவில் ஜெயித்து, எப்படியாவது அந்தத் தொகையைக் கடன்பட்டவர்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பது கவின் லட்சியமாகவும் இருந்துள்ளது. அதற்காகவே ஓடிக்கொண்டிருக்க, சின்னத் திரை வாசலை எட்டி, அங்கிருந்து சினிமாவிலும் கால் வைத்துள்ளார். இடையில் பிக்பாஸ் அழைக்க, அதன் மூலம் வெற்றி அடைந்து பணம் சம்பாதிக்க நினைத்து உள்ளே வந்துள்ளார். இன்று, கவின் உலகப் பிரபலமாக, கெட்ட நேரம் கடன் பட்டவர்களையும் சேர்த்து கவின் குடும்பத்தைச் சிக்கலில் சேர்த்துள்ளது.

இது குறித்து தமது மகனுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் என்று தாயுள்ளம் கூறியபோதும், இன்னும் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். கவின் வந்தாலும் இந்த விவகாரத்தை உடனே முடிக்க முடியாது என்பதால் அவரை வேதனைப்படுத்தாமல் உள்ளேயே இருந்துவிட்டு பிறகு வரட்டும் என்று தாய் ராஜலட்சுமி கோரிக்கை வைத்துள்ளாராம்.