தொழிலியல் வல்லுநர்களை உருவாக்கும் பணி தொடரும்! மை ஸ்கீல் அறவாரியம் உறுதி

களும்பாங், செப்.1-

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்பதை அறிந்து அவர்களின் தேவைக்காகத் தொடங்கப்பட்டது மை ஸ்கீல் அறவாரியம். இப்படிப்பட்ட இளைஞர்களைத் தொழிலியல் வல்லுனர்களாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி தேவஷர்மா கங்காதரன் கூறினார்.

மை ஸ்கீல் அறவாரியத்தின் பொது நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி மிக விமரிசையாக நடந்தது. அதில் அந்தத் தொழில்திறன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்குப் படிக்கும் மாணவர்கள் உணவு தயாரித்தல் உட்படப் பலவகையான கூடாரங்களை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற்றனர். அவர்களுக்காக இதர போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மை ஸ்கீல் அறவாரியத்தின் நடவடிக்கைக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்பது நன்கொடையாளர்கள் தான். அவர்களால்தான் சிறந்த நடவடிக்கைகளை நம்மால் தொடர்ந்து முன்னெடுக்க முடிவதாகவும் தேவஷர்மா கூறினார்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தாகவும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட அவர் இங்கு மாணவர்கள் நாளுக்கு நாள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதாகவும் கூறினார். 35 ஏக்கர் நிலப்பரப்பில் மை ஸ்கீல் அறவாரியம் 3000 சதுர அடியில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தொழில்திறன் பயிற்சிகளை முன்னெடுக்கும் மாணவர்களும் காலையில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.

பல்வேறு குடும்பச் சூழ்நிலையைக் கொண்டிருக்கும் இவர்கள் சிறந்த தலைமைத்துவ மிக்கவர்களாக உருவாக்கப்படுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக தேவஷ்ர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் மை ஸ்கீல் அறவாரியத்தின் தோற்றநர் வழக்கறிஞர் பசுபதி, டிரா மலேசியா தலைவர் சரவணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.