ஆலோசனைக்குப் பிறகு உயர்க்கல்வியை தொடருங்கள்! – இடபள்யூஆர்எப் முருகன்

ரவாங், செப். 4-

இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு உயர்நிலை கல்விக்கூடங்களுக்கு மேற் கல்வியைத் தொடர செல்லும் மாணவர்களுக்கு இடபள்யூஆர்எப் எனப்படும் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் முறையான ஆலோசனையை வழங்க தயாராக உள்ளது.

இதுபோன்ற சேவைகளை நம்முடைய மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் மிக அவசியம் என அவ்வியக்கத்தின் கிளை தலைவர் முருகன் கேட்டுக்கொண்டார்.  கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் ரவாங் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்காலகட்டத்தில் நம்முடைய மாணவர்கள் இடைநிலை கல்வியை முடித்து விட்ட பிறகு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப எவ்வகையான மேற்கல்வியைத் தொடரலாம் என்பதற்குச் சரியான ஆலோசனை தேவைப்படுகின்றது. சரியான ஆலோசனை பெறாமல் ஏதாவது ஒரு துறையில் படிக்கச் சென்று விட்டு அதன் பிறகு படிப்பைத் தொடர முடியாமல் நிதி பிரச்சனை உட்பட பல்வேறு சிக்கல்களில் நமது மாணவர்கள் தவிப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

இம்மாதிரியான சிக்கல்களைத் தொடக்கத்திலேயே களைவதற்கு நமது மாணவர்கள் ஆலோசனை பெறுவது மிக அவசியம். ஆலோசனை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம் என முருகன் தெரிவித்தார்.

நம்மிடையே ஒற்றுமை வலுப்பெற்றால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்நாட்டில் இனத்துவேசம் பூசப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. அதனைக் கையாள்வதற்கு மலேசியர்களின் ஒற்றுமை மிக அவசியம் எனச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் சார்பில் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற அவரின் சிறப்பு அதிகாரி ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகக் கவுன்சிலர் ஸ்ரீ விக்னேஷ், முரளி, பாத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினரின் இந்திய பிரிவு அதிகாரி சின்னையா, கம்போங் கொஸ்கன் கிராமத்து தலைவர் கலைவாணி உட்படப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட அதேவேளையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிக்கு  டி- சட்டையும் வழங்கப்பட்டது.