புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் ! மகாதீரிடம் நரேந்திர மோடி கோரிக்கை
இந்தியா/ ஈழம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் ! மகாதீரிடம் நரேந்திர மோடி கோரிக்கை

மோஸ்கோ செப்டம்பர் 5 –

பயங்கரவாதம், பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவால் தேடப்படும் சர்ச்சைக்கூறிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை தெற்கு ஆசியாவின் முன்னணி மல்டிமீடியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஏதேனும் பதில் அளித்தாரா என்பது தெளிவாகக் கூறப்படாத நிலையில் இந்த விவகாரம் குறித்து இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்பில் இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜாகிர் நாயக் விவகாரம் எங்களுக்கு மிக முக்கியமான பிரச்சனை என்று இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகாலே மூன்று நாள் கிழக்கு பொருளாதார உச்ச மாநாட்டிற்கு முன்னதாகப் பிரதமர் மோடியின் இருதரப்புக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியிருந்தார்.

மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இரண்டாவது முறையாக நரேந்திர மோடி இந்த மாநாட்டில் சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றிய பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற மகாதீரை மரியாதை நிமிர்த்தமாக நரேந்திர மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாகிர் நாயக் நடவடிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வங்காளதேசம் டாக்கா பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகள் தங்களை இம்மாதிரியான நடவடிக்கைக்குத் தூண்டியதாகக் கூறிய பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முனைப்புக் காட்டியது.

இதை அறிந்த ஜாகிர் நாயக் இந்தியாவிற்குத் திரும்பவில்லை. மலேசியாவிற்குத் தனது தளத்தை மாற்றினார். இப்பொழுது மலேசியாவில் அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது அதிக விசுவாசம் கொண்டு உள்ளார்கள் என ஜாகிர் நாயக் கூறிய கருத்துப் பூகம்பமாக வெடித்தது. அதோடு இந்த நாட்டின் முதல் வந்தேறிகளான சீனர்கள் முதலில் நாடு திரும்ப வேண்டும் என்று அவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

One thought on “ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் ! மகாதீரிடம் நரேந்திர மோடி கோரிக்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன