பிரதமரின் ஜப்பான் பயணம் நாட்டின் கடன் சுமையை அதிகரிக்கும்! -கெராக்கான் சாடல்

0
3

கோலாலம்பூர், செப்.6-

சமுராய் போண்ட் எனும் கடன் உத்தரவாதத்தை மீண்டும் பெறும் நோக்கத்திற்காக  பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பயணத்தை  கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார் .

பொருளாதாரத்தை மேம்படுத்தும் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் நாடு சுய காலில் நிற்கும்  வலிமையைப் பெற்றிருப்பது  குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இதை விடுத்து கடன் உத்தரவாதப் பத்திரங்கள் அல்லது கடனைச் சார்ந்து இருக்கும் போக்கை முற்றாகக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

மேம்பாடடைந்த நாடுகளும் மேம்பாடடைந்து வரும் நாடுகளும் கடன் வாங்குவது ஒரு வழக்கமான நடைமுறையாகும். எனினும்,  இந்த கடன் தொகை விரைவில் அதிகரிக்கக்கூடும் என்பதால்   அது அடுத்த தலைமுறையினரின் தோள்களில் பெரும் சுமையாக மாறி விடும் என்பதோடு இது ஒரு ‘தேசிய புற்று நோயாகவும் உருமாறிவிடும்’ என்பதையும்   அவர் நினைவுறுத்தினார்.

பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டு  ஓராண்டு மூன்று மாதங்களே  கடந்துள்ள நிலையில் அது இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 200 பில்லியன் யென் ( வெ.7.3 பில்லியன்) கடன் உத்தரவாதப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் நிதியமைச்சர் லிம் குவான் எங் சீனா சென்று பாண்டா கடன் உத்தரவாதப் பத்திரங்கள் குறித்து அந்நாட்டுடன் பேச்சு நடத்தியுள்ளார். இப்போது பிரதமர்  ஜப்பான் சென்று  மீண்டும் சமூராய் போண்ட் பத்திரங்கள் வெளியிடுவது குறித்து பேச்சு நடத்தவுள்ளார். நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கடனாளிகளாக இருக்க வேண்டும் என்று பக்காத்தான் கூட்டணி விரும்புகிறதா என்று டோமினிக் லாவ் வினவினார்.

புத்ராஜெயாவைக் கைப்பற்றியதும் நாட்டின் கடன் தொகை 1 டிரில்லியன் வெள்ளியைத் தாண்டியுள்ளது என்று லிம் குவான் எங் மக்களிடம்  அறிவித்ததை டோமினிக் லாவ் சுட்டிக் காட்டினார் .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும்  அரசாங்கத்திடமிருந்து முந்தைய அரசாங்கம் அதிகளவு கடன் வாங்கியிருந்தது குறித்து  பிரதமர் குறை கூறினார். எனினும், இந்தக் கடன்களைக் குறைக்க புதிய அரசாங்கம் எந்தவொரு வியூகமும் வகுக்கவில்லை. மாறாக, எல்லா இடங்களிலும்  கடன் உத்தரவாதப் பத்திரங்களை வெளியிட்டு வருவதாக அவர் கூறினார்.

நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக ஒரு முழுமையான வியூகத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதை விடுத்து ஜப்பான் அல்லது சீனாவிற்குச் சென்று கடன் வாங்கக்கூடாது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் பிரதமர் ஜப்பானுக்கு 6 முறை பயணம்  மேற்கொண்டுள்ளார். இரண்டரை மாதங்களுக்கு ஒரு முறை ஜப்பான் சென்றிருக்கும்   பிரதமர் இதுவரை சமுராய் போண்டைத் தவிர்த்து அப்பயணம் வழி  நாட்டிற்காக ஆக்கப்பூர்வமான  விஷயம் எதனையும்  மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.

அரசாங்கத்தின் வருமானத்தை  உயர்த்தும் வகையில்  ஜிஎஸ்டி வரியை மேலும் வெளிப்படையாகத் திகழச் செய்வதோடு அதனை 4 விழுக்காடாகவும்  நிலைநிறுத்தலாம் என்றும் அவர்  கருத்துரைத்தார்.

அதேவேளையில், செலவினங்களைக் குறைக்கக்கூடிய முழுமையான வியூகம் ஒன்றை வகுப்பதோடு நாட்டின் பற்றாக்குறை விகிதத்தை மெல்ல குறைத்து கடன் சுமையைக் குறைக்கும் இலக்கையும்  அடைய வேண்டும் என்று டோமினிக் லாவ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.