மஞ்சோங், செப்டம்பர் 7-

பெருவாஸ், செக்‌ஷன்  10 WSE மேற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கார் தீயில் எரிந்து சாம்பலானது. அந்தக் காரில் பயணித்த இந்திய இளைஞர்கள் இருவர் தீயில் கருகி மாண்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எஸ்.மகேந்திரன் (வயது 26) மற்றும் அரிகரன் (வயது 28) உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த 30 வயதுடைய மற்றொருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹனிப் ஒத்மான் தெரிவித்தார்.

அவர்கள் பயணித்த சாலை பயணிக்களுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. அவர்கள் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலை கட்டுமான இயந்திரங்களை மோதியது. இதனால், காரில் தீப்பிடித்திருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஹனிப் தெரிவித்தார்.

இச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இதனிடையே, உயிரிழந்த மகேந்திரனின் உறவினர் கூறுகையில், ஜோகூரில் இருந்த அவர் மஞ்சோங்கிற்கு வந்தது தெரியாது என்று அவர் கூறினார்.

நண்பனின் திருமணத்திற்கு வந்திருக்கக்கூடும். இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் குறித்து  தகவல் கிடைத்தது. மகேந்திரன் மஞ்சோங்கிற்கு வந்திருப்பது தெரிந்திருந்தால் கட்டாயம் அவர் எங்கும் செல்லாமல் தடுத்திருப்பேன் என அவர் தெரிவித்தார்.