செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை!
அரசியல்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை!

பினாங்கு செப்டம்பர் 9-

பினாங்கு மாநிலத்திலுள்ள எல்லா வீடமைப்புப் பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் பேதமின்றி மேற்கொள்ளப்படுமென்றும், இந்த விவகாரத்தில் பாராபட்சம் எதுவும் காட்டப்படாது என்று, மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெருவளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிருக்கும் பல்வேறு வீடமைப்புப் பகுதிகளில் நிலவி வந்த சீரமைப்புப் பணிகளுக்காக மாநில அரசு இதுவரையில் 23 கோடி ரிங்கிட் நிதியை செலவழித்திருப்பதாகவும் இந்த விவகாரத்தில் மேலும் 10 கோடியே 10 லட்சம் ரிங்கிட் நிதியை செலவிடுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அண்மையில் இங்கிருக்கும் நோர்டின் ஸ்திரிட் சாலையிலுள்ள அடுக்குத்தள வீட்டுக் கட்டடங்களில் மாநில அரசின் நடவடிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாயப் பூச்சுப் பணிகளை பார்வையிடுவதற்கு அவர் வருகையளித்திருந்தபோது, செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் ஜெகதீப் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சுமார் 285 ஆயிரம் ரிங்கிட் செலவினை ஈர்த்திருக்கும் இந்த சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு விஜயமளித்திருந்த அவருடன், மாநில முதல்வர் சாவ் கொன் இயாவ், வட்டார சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் உள்ளிட்டப் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் இங்கு வருகையளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய சாயப் பூச்சு பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தியாகி விடுமென்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஜெகதீப். மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைத் தொடங்கிய கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இங்கிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக 23 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டிருப்பதாக விவரித்துள்ளார்.

மறு சீரமைப்பு விவகாரத்தில் அரசின் வீடமைப்புப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்திடாமல் பரந்த நோக்குடனும் பாராபட்சமின்றியும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீடமைப்புப் பகுதிகளிலும் கூட மாநில அரசு  இத்தகையப் பணிகளை பரிவுடன் மேற்கொண்டு வந்திருப்பதாக அவர் முறையிட்டுள்ளார்.

அவ்வண்ணம் மாநிலத்திலுள்ள மேலும் சுமார் 612 வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு 10 கோடியே 10 லட்சம் ரிங்கிட் நிதியை கோரியிருப்பதாகவும், இதிலிருந்தே மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து,அரசு செயல்படுவதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன