செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > உலகக்கிண்ண தகுதிச் சுற்று: மலேசியா – ஐக்கிய அரபு சிற்றரசு இன்று பலப்பரீட்சை!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலகக்கிண்ண தகுதிச் சுற்று: மலேசியா – ஐக்கிய அரபு சிற்றரசு இன்று பலப்பரீட்சை!

கோலாலம்பூர் செப் 10 –

இன்று புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறும் உலகக் கிண்ண ஜி பிரிவுக்கான தகுதி சுற்றுப் போட்டியில் மலேசிய கால்பந்து அணி ஐக்கிய அரபு சிற்றரசு குழுவுடன் மோதுகிறது. மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக மலேசிய குழுவினர் கடுமையான போராட்டத்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியதன் மூலம் மூலம் புதிய நம்பிக்கையோடு இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றனர்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு சிற்றரசு குழுவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்வதற்காக இன்றைய ஆட்டத்தில் தேசிய கால்பந்து குழுவினர் தங்களது முழு முயற்சியையும் ஒன்றுதிரட்டி விளையாடுவார்கள் என பயிற்சியாளர் டான் செங் ஹோ கூறுகிறார்.

இதற்குமுன் மலேசியா எட்டுமுறை ஐக்கிய அரபு சிற்றரசு குழுவுடன் தோல்வி கண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய அரபு சிற்றரசு குழுவிடம்  10-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த கால முடிவுகளை எல்லாம் மறந்துவிட்டு இன்று புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடு மலேசிய குழுவினர் களம் இறங்குவார்கள் என டான் செங் ஹோ தெரிவித்தார். தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது, அதே வேளையில் மின்னல் வேக தாக்குதல் நடத்தி ஐக்கிய அரபு சிற்றரசு குழுவை திக்குமுக்காட வைக்கும் வியூகம் இன்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

இதற்கு முன் ஐக்கிய அரபு சிற்றரசு குழுவுடன் 11 முறை மலேசிய குழு மோதியிருந்தாலும் 1980ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கிலும் பின்னர் 1982 ஆம் ஆண்டு மெர்டேக்கா கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கிலும் மலேசியா வென்றுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசு குழுவை நாம் சாதாரணமாக கருதிவிட முடியாது. பல சிறந்த ஆட்டக்காரர்களை அந்த அணி கொண்டுள்ளது . அவர்களது வேகத்திற்கு ஈடு கொடுத்து நமது குழுவினர் விளையாட வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளனர்.

உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவும் மலேசிய குழுவிற்கு இருப்பதால் அவர்களது வெற்றிக்கு இது மேலும் துணையாக இருக்க முடியுமென டான் செங் ஹோ கூறுகிறார். எப்படி இருந்த போதிலும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன