செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அழைப்பு வந்தது.. அனுமதி இல்லை! ஆலய நிர்வாகத்தின் மீது உறுப்பினர்கள் புகார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

அழைப்பு வந்தது.. அனுமதி இல்லை! ஆலய நிர்வாகத்தின் மீது உறுப்பினர்கள் புகார்

கோலாலம்பூர் செப். 10-

தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான பங்சார் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக நிர்வாகத்தின் மீது அதன் நீண்ட கால உறுப்பினர்கள் சங்கங்களின் பதிவிலாகாவிடம் புகார் அளித்துள்ளனர். ஆலயத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கிடைக்கப்பெற்ற நிலையில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் பதிவு ரத்துச் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுக் கூட்டத்தை நடத்தவில்லை என்ற காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சங்கங்களின் பதிவிலாகா அறிவித்திருந்தது.

இதனால் ஆலயத்தின் சொத்துக்கள் அனைத்தும் திவால் இலாகாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் யாருடைய தலைமைத்துவத்தில் செயல்பட்ட போது ஆலயத்தின் பதிவு ரத்துச் செய்யப்பட்டதோ அவரே ஆலயத்தை நிர்வாகிக்கும் குழுவின் தலைவராக நியமனம் பெற்றார் என இவ்வாலயத்தின் முன்னாள் செயலாளரான ச. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.

2014 தொடங்கி இன்று வரை அவ்வாலயத்தில் என்ன நடந்தது என்று உறுப்பினர்களுக்குத் தெரியாது. இந்த ஒரு சூழ்நிலையில் ஆலயத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடக்க இருப்பதாக எங்களுக்குக் கடிதம் கிடைத்தது. இக்கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு அக்கூட்டத்திற்குச் சென்றோம். ஆனால் 40க்கும் மேற்பட்ட அவ்வாலயத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த அத்தனை முன்னாள் உறுப்பினர்களும் ஆண்டுக் கூட்டம் நடந்த மண்டபத்திற்கு வெளியே காத்துக் கிடந்தோம் என சண்முகம் தெரிவித்தார். இந்த விவகாரம் நாளிதழ்களில் வெளிவந்த போது இச்செய்திக்கு பதிலளித்த ஆலய தற்காலிக நிர்வாகத்தினர் இக்கூட்டம் நிர்வாகக் குழு கூட்டம். ஆண்டுப் பொதுக்கூட்டம் அல்ல என மறுப்பு தெரிவித்தனர்.

எங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் ஆண்டுப் பொதுக்கூட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். இதில் மிக முக்கியமாக முன்னாள் உறுப்பினர்கள் இல்லாமல் எப்படி புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது என்று சண்முகம் கேள்வியெழுப்பினார்.

இதன் அடிப்படையில் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலய மூத்த உறுப்பினர்களான நாங்கள் சங்கங்களின் பதிவிலாகாவிடம் தற்போதைய நிர்வாகம் எனக் கூறிக் கொள்பவர்களுக்கு எதிராகப் புகார் செய்துள்ளோம் என்றார். சங்கங்களின் பதிவு இலாகா ரத்து செய்த ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலய முன்னாள் நிர்வாகம் மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை.

முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு அதில்தான் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முன்னாள் உறுப்பினர்களின் உரிமையைப் பறித்து விட்டு புதிய நிர்வாகம் ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது செல்லாது என சண்முகம் திட்டவட்டமாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன