புக்கிட் ஜாலில் செப், 10-

கலைத் துறையில் மேம்பாடு கண்ட நாடுகளுக்கு இணையாக மலேசிய படைப்பாளர்களும் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்து வருகிறார்கள் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வெளிநாட்டுப் படைப்புகளுக்கு இணையான தயாரிப்புகளை மலேசியர்களும் தயாரிக்கின்றார்கள். மலேசிய கலைத்துறைக்கு என்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி இருப்பது இத்துறையின் மேம்பாட்டைக் காட்டுகின்றது என அவர் மேலும் கூறினார். மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கம், மலேசிய இந்திய பாடகர் நடிகர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறும்பட விருது விழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலைத்துறையை எவ்வாறு பொருளாதார நிலையில் மேம்படுத்த முடியும் என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். பொருளாதார ரீதியில் மேம்பட்ட தயாரிப்பாளர்களாக நாம் உருமாறும் போது நமது படைப்புகள் உலகத் தரத்தை எட்டும் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இளம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்த நாடறிந்த அறிவிப்பாளர் கவி மாறனையும், பன்முகக் கலைஞரான காந்திபனையும் அவர் பாராட்டினார்.

இந்தக் குறும்பட விருது விழாவில் 10 விருதுகள் வழங்கப்பட்டன. அதனை நமது நாட்டின் முன்னணி கலைஞர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எடுத்து வழங்கினர். அனைவரும் எதிர்பார்த்த சிறந்த இயக்குனருக்கான விருது முதல் படையல் குறும்படத்தை இயக்கிய மதன் குமாருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் பட்டியல்..

FAME குறும்பட விருது 2019

அதிகாரப்பூர்வ வெற்றியளர்கள் பட்டியல்

1. சிறந்த மக்கள் தேர்வு குறும்படம் : போஸ்
2. சிறந்த எடிட்டர் – திரு.தேவா (போஸ்)
3. சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு.ஜாலி (குறுஞ்செயலி)
4. சிறந்த இசையமைப்பாளர் – திரு.ஜாலி (குறுஞ்செயலி)
5. சிறந்த கதை – முதல் படையல்
6. அறிமுக நடிகர் – தினகரன் ரமேஸ் (முதல் படையல்
7. சிறந்த வில்லன் – திரு. தணிகாசலம் (போஸ்)
8. சிறந்த நடிகை – கல்பனா (முகில்)
9. சிறந்த நடிகர் – திரு. ஜெகன் (அப்பா)
10. சிறந்த இயக்குனர் : திரு. மதன் குமார் (முதல் படையல்)

இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், நாட்டின் மூத்த முதன்மை கலைஞர்கள் அனைவருக்கும் காந்திபன் தெரிவித்துக்கொண்டார்.

வரவேற்புரை நிகழ்த்திய கவிமாறன் உள்ளூர் படைப்புகளை மலேசிய உள்ளூர் கலைஞர்களை முதலில் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரே ஆண்டில் பல விருது விழாக்கள் நடப்பது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறிய அவர் இது வளரும் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மருந்து என தெரிவித்தார்.