வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்நேசனை மற்றவரிடம் ஒப்படையுங்கள்! மெழுகுவர்த்தி ஏந்தி முன்னாள் ஊழியர்கள் கோரிக்கை
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்நேசனை மற்றவரிடம் ஒப்படையுங்கள்! மெழுகுவர்த்தி ஏந்தி முன்னாள் ஊழியர்கள் கோரிக்கை

பத்துமலை செப். 10-

தெற்காசியாவில் மிகவும் பழமையான நாளிதழ் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் தமிழ்நேசனை மற்றொரு நிர்வாகத்திடம் கொடுத்துவிட வேண்டும் என அதன் முன்னாள் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ் நேசன் 95 ஆண்டுகள் நிறைவு பெற்று 96 ஆம் ஆண்டுக் காலடி எடுத்து வைக்கின்றது. 2024 இல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரே தமிழ் நாளிதழ் என்ற பெருமையைச் சொந்தம் கொண்டாடவிருக்கும் சூழ்நிலையில் அதன் சேவை இவ்வாண்டு ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டது.

நிதி நெருக்கடி காரணமாகத் தமிழ்நேசன் மூடப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்திருந்தார். அங்குப் பணி செய்த ஊழியர்களுக்கு மார்ச் மாதம் வரை ஊதியம் வழங்கப்படும் என்ற உறுதி கடிதமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுநாள் வரை மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. தங்களின் இழப்பீட்டு நிதியும் கொடுக்கப்படவில்லை என்பதை முன்னிறுத்தி அதன் முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு பத்துமலைத் திருத்தலத்தில் தமிழ்நேசன் பெயரில் அர்ச்சனை செய்த பிறகு தமிழ்நேசன் அலுவலகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

நூற்றாண்டு விழாவை தமிழ்நேசன் கொண்டாட வேண்டும். அதனால் தமிழ்நேசனை வேறு ஒரு தரப்பினரிடம் கொடுத்துவிட வேண்டும் என அதன் ஆசிரியர் கே. பத்மநாபன். கூறினார். எங்களின் வலி வேதனை நிர்வாகத்திற்குப் புரியவில்லை என்பது மன அழுத்தத்தைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர் இறுதிவரை எங்களின் போராட்டம் ஓயாது என்றும் சூளுரைத்தார்.

எங்களின் ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைக் காட்டிலும் வரலாறு கொண்ட தமிழ் நேசன் பாதியில் நிறுத்தப்படுவது தான் வேதனையின் உச்சம் என்றார். தமிழ் நேசன் தொடர்ந்து செயல்பட வேண்டும் இந்நாட்டிலுள்ள தமிழர்களின் அடையாளமாக விளங்கும் இந்த நாளிதழை மீண்டும் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழ் நேசனின் உரிமத்தைப் பெற்று அதனை வழி நடத்துவதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் முன்னாள் நிர்வாகம் தமிழ்நேசனை வேறு தரப்பினருக்கு கொடுத்து விடுவதுதான் மிகச் சரியான நடவடிக்கை என அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நேசன் நிர்வாகத்தின் முன்னாள் ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர் தமிழ்நேசன் அலுவலகத்தின் முன் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி தங்களின் மன வலியை செய்தியாளர்களிடம் பதிவுசெய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன