உலக நாடுகளின் அதிபதி என கூறும் அமெரிக்க நியூயோர்க் நகரின் உள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்கய்தா தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்தி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த இந்தத் தாக்குதல்கள் உலக வரலாற்றில் மறக்க முடியாத கருப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகப் போரின் போது அமெரிக்காவின் பால்ஸ் துறைமுகத்தில் நடந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல் என இந்தத் தீவிரவாத தாக்குதல் குறிப்பிடப்படுகின்றது.

மிக முக்கியமாகத் திட்டமிட்டு விமானத்தைக் கடத்தி உலக வர்த்தகக் கட்டிடமான இரட்டை கோபுரத்தை தகர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இறந்ததையும் கணக்கிட முடியாத பொருள் சேதங்களையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது.

2973 பேரை பறிகொடுத்த மிகக் கோரமான சம்பவமாக அமெரிக்க வரலாற்றில் பதிவான பயங்கர நாள் இன்று. நான்கு விமானங்களை 246 பேருடன் கடத்தி தீவிரவாதிகள் 9 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.

விமானங்களை அமெரிக்காவின் முதன்மை இரட்டை மாடி கோபுரத்தில் செலுத்தி அவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அந்த இரண்டு கட்டடமும் தீப்பிடித்து எரிந்தது. 2 மணிநேரம் தொடர்ந்து அந்தக் கட்டடங்கள் எரிந்த நிலையில் அந்தத் தீயை அணைப்பதற்குத் தீயணைப்பு மீட்பு படை மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டது.

தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டுமென மேல் மாடியில் இருந்து பலர் குதித்ததால் கீழே விழுந்து கொடூர மரணமடைந்தனர்.

இந்தக் கொடூர தாக்குதலுக்குப் பிறகு அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்கா. இதே நாள் மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்படும் எனத் தீவிரவாத குழு அறிவித்த நிலையில் செப்டம்பர் 11 என்பது அமெரிக்கர்கள் மனதில் அழுத்தமான வலியை பதிவு செய்துள்ளது.