புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பாரதீ – நினைவு நாள் !
முதன்மைச் செய்திகள்

பாரதீ – நினைவு நாள் !

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா, சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா, சாத்திரமுண்டோடீ…

அரசியல், ஆன்மீகம், காதல், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, பெண் விடுதலை என்று, அந்த முண்டாசு கவியின் பேனா— தொடாத எல்லைகள் இல்லை.

சிறு வயதிலேயே, தமிழ் மொழியில் பாரதியாருக்கு புலமை இருந்ததால், ஏழு வயதில் படிக்கும்போதே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்திய இவருடைய கவிப்புலமையை பாராட்டி, எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கியது முதல் “சுப்பிரமணிய பாரதியார்” என்று அழைக்கப்பட்டார்.

செல்லம்மாவை சிறுவயதிலேயே, திருமணம் செய்து கொண்ட பாரதி, தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு வறுமை நிலையினை அடைந்து, சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுரத்து மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

‘மீசை கவிஞன், ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார்.

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. தம் தாய்மொழி தமிழின் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் பாரதி, பன்மொழிப் புலமைபெற்ற பாவலராகவும் விளங்கினார்.

பாட்டுக்கொரு புலவனான பாரதி, இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து, புதுக் கவிதையால் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் அறிவு சார்ந்த புதுக்கவிதைகள் இவரில் தொகுப்பில் அடங்கியிருக்கின்றன.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி தேசியக் கவியாகப் இன்றும் போற்றப்படுகிறார்.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டு செப்டம்பர் 11-ஆம் நாள், தனது 39 ஆவது வயதில் பாரதியார் தெய்வமானார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன