புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > காட் விவகாரம்: பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? – கெராக்கான் சவால்
அரசியல்முதன்மைச் செய்திகள்

காட் விவகாரம்: பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? – கெராக்கான் சவால்

கோலாலம்பூர், செப்.11-

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் ஜாவி காட் எனும் அரேபிய ஓவிய எழுத்து கட்டாயமாகப் புகுத்தப்படுவது குறித்து விவாதம் செய்யத் தயாரா என்று இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கிற்கு கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சவால் விடுத்தார்.

தமிழ், சீனப் பள்ளிகளில் இந்த எழுத்து போதிக்கப்படுவதற்கு ஜசெக தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதால் இது  எந்த வகையில்  நன்மை அளிக்கும்  என்பதை பொது மேடையில் விவாதிப்பதற்கு லிம் கிட் சியாங்கிற்கு டோமினிக் லாவ் அழைப்பு விடுத்தார்.

“உண்மையில், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க துணை கல்வியமைச்சர் தியோ நீ சிங்கிற்கு நான்  அழைப்பு விடுத்தேன். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததைத் தொடர்ந்து  லிம் கிட் சியாங் எனது அழைப்பை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

1984ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நான்யாங் சியாங் பாவ் இதழில்  ஜாவி காட் அறிமுகத்திற்கு அப்போதைய ஜசெக பொதுச்  செயலாளர் லிம் கிட் சியாங் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த செய்தி பிரசுரமாகி இருந்தது. கூட்டரசு அரசியலமைப்பு  சட்டமைப்பின் 152ஆவது பிரிவில் மலாய் மொழி ரோமன் எழுத்துகளில் எழுதப்படும் என்று குறிப்பிட்டுள்ளதை கிட் சியாங் சுட்டிக் காட்டியிருந்ததாக  டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

லிம் கிட் சியாங் எதிர்த்த ஜாவி எழுத்து இன்னும் மாறவில்லை. ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜாவி எழுத்து மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் லிம் கிட் சியாங் மட்டும் முன்பிருந்த கிட் சியாங் போல்  இல்லை என்று அவர் கிண்டலடித்தார்.

எனது  சவாலை கிட் சியாங் ஏற்பார் என்று நான் நம்புகிறேன்.காரணம், உண்மை மேலும் தெளிவாக விளக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கை குறித்து மக்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று டோமினிக் லாவ்  வலியுறுத்தினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொது விவாத கலாச்சாரத்தை ஜசெக அதிகம் ஆதரித்தது.  அரசியல் கட்சிகளுக்கு இடையிலான விவாதத்தை ஓர் ஆரோக்கியமான ஜனநாயகமாக  மாற்ற முடியும் என்று கெராக்கான் நம்பிக்கை
தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன