காஜாங், செப்டம்பர் 16-

ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவராக செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் ஐந்து உதவி தலைவர்கள் மத்திய செயலவை உட்பட மகளிர் இளைஞர் பகுதிகளுக்கும் போட்டி இல்லை.

நேற்று ஐபிஎப் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நடந்தது. டத்தோ சம்பந்தனை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேர்தல் நடவடிக்கை குழு அதிகாரி அறிவித்தார்.

அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக டத்தோ லோகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உதவி தலைவர்களாக கெடா மாநில தலைவர் வேலாயுதம், பினாங்கு மாநில தலைவர் ஏழுமலை, நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோ விஸ்வநாதன், சிலாங்கூர் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், பேரா மாநில பாகான் டத்தோ தொகுதி தலைவர்அப்பள சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மாதர் பகுதி தலைவராக ராஜம்மா மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் பகுதியின் புதிய தலைவராக கணேஷ்குமார் சம்பந்தன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி ஐ பி எஃப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு மிக விமர்சையாக நடைபெற இருக்கின்றது. இந்த மாநாட்டை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் சையிட் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கின்றார்.

இந்த மாநாடு ஐபிஎப் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 800க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொள்வார்கள். 20 ஆண்டு காலமாக ஐபிஎப் கட்சியின் ஒரே போராட்டம் என்பது தேசிய முன்னணியில் அங்கத்துவம் பெற வேண்டும் என்பதுதான். தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை இந்த மாநாட்டிலும் நேரடியாக வலியுறுத்தப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் சம்பந்தன் திட்டவட்டமாக கூறினார்.