வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குத்தகை அனுமதி கடிதத்தில்  கையெழுத்திட்டது யார்? நிதியமைச்சரிடம் டத்தோ  டோமினிக் லாவ் கேள்வி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

குத்தகை அனுமதி கடிதத்தில்  கையெழுத்திட்டது யார்? நிதியமைச்சரிடம் டத்தோ  டோமினிக் லாவ் கேள்வி

கோலாலம்பூர், செப்.17-

பிரதமர் நேரடியாக அளித்த 450 மில்லியன் வெள்ளி மதிப்பிலான குத்தகை கடிதம் குறித்து நிதியமைச்சர் லிம் குவான் எங் விளக்கமளிக்க வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய்  வலியுறுத்தினார்.

கடந்த ஓராண்டு காலமாக திறந்த குத்தகை முறையை அமல்படுத்தும் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. தற்போது, சர்ச்சைக்குரிய 450 மில்லியன் வெள்ளி மதிப்பிலான குத்தகை ஒப்பந்த விவகாரம் எழுந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த குத்தகையை ஒரு நிறுவனத்திற்கு பிரதமர் நேரடியாக அளித்துள்ளார் என்று நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ கடிதம் கூறியுள்ளது. ஆனால், செய்தியாளர்கள் கேட்கும்போது இது குறித்து தமக்குத் தெரியாது என்று லிம் குவான் எங் பதிலளித்துள்ளார். பிரதமரோ இந்த குத்தகையைத் தான் அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று டோமினிக் லாவ்  சுட்டிக் காட்டினார்.

இத்தகைய பெரிய மதிப்பிலான குத்தகை குறித்து நிதியமைச்சரும் பிரதமரும்  எவ்வாறு அறியாமல் இருப்பர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இணையத்தில் பரவி வரும் நிதியமைச்சின் கடிதத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான குத்தகைகள் நிதியமைச்சின் அனுமதி பெற்ற பின்னரே அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரம் குறித்து மக்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிப்பது நிதியமைச்சின் கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில்  இணையத்தில் பரவும் கடிதத்தில் தான் கையொப்பமிடவில்லை என்று திரும்பத் திரும்ப மறுப்பதற்குப் பதிலாக, 450 மில்லியன் வெள்ளி மதிப்பிலான குத்தகை அனுமதி கடிதத்தில் தான் ஏன்   கையெழுத்திடவில்லை என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்றார் அவர்.

நிதியமைச்சில் அமைச்சரைக்  காட்டிலும் கூடுதல் அதிகாரம் யாரிடம் உள்ளது? இத்தகைய பெரிய மதிப்பிலான குத்தகை அனுமதியில் அவர் எப்படி கையெழுத்திட முடியும்? இது உண்மையாகவே கடுமையான விதிமுறை மீறலாகும் என்று டோமினிக் லாவ் சாடினார்.

பக்காத்தான் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திறந்த குத்தகை முறையை அறிவித்திருந்தது. ஆனால், அதன் வாக்குறுதிகளை அக்கூட்டணியே மீறி வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன