கோலாலம்பூர், செப்டம்பர் 19-

பள்ளிக்கூடங்களில் அரசியல் நுழையக்கூடாது. அப்படி அரசியல் நுழைந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஓம் அறவாரியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான செந்தமிழ்ச்செல்வன் தியாகராஜன் தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் யு பி எஸ் ஆர் தேர்வில் ஏழு ஏ பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு முதன்மை காரணமானவர் கல்வித் துறையின் முன்னாள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ கமலநாதன் என ஓம்ஸ் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தங்களின் வேலைக்கு பாதிப்பு வரும் என ஆசிரியர்கள் விலகியதன் காரணமாக இந்த தங்கப் பதக்க விருது விழா நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.

இன்று ஆட்சி மாற்றம் கண்டுள்ளது. அதனால் விடுபட்ட ஆண்டுகளையும் இணைத்துக்கொண்டு இவ்வாண்டு தங்க பதக்கம் வழங்கும் விழா மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பசிபிக் தங்கும் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓம்ஸ் தியாகராஜன் மேற்கண்டவாறு கூறினார்.

பள்ளிக்கூடங்களில் அரசியல் நுழைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். தமிழ்ப் பள்ளி மாணவர்களை நாம் தொடர்ந்து ஊக்குவித்தால் அவர்கள் பல சாதனைகளை படைப்பார்கள். அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது அரசியல் குறுக்கீடுகள் பல பாதகமான செயல்களை உண்டாக்குகின்றன என்றார் அவர்.

இந்த மாபெரும் தங்கப்பதக்கம் பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையேற்று திறந்துவைக்கிறார். அதோடு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு 59 மாணவர்களும் 2017ஆம் ஆண்டு 70 மூன்று மாணவர்களும் 2018ஆம் ஆண்டு 105 மாணவர்களும் 8 ஏ பெற்றனர். இவர்களுடன் ஏழு,ஆறு,ஐந்து ஏ பெற்ற மாணவர்களுக்கும் இந்த விழாவில் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்.

ஓம்ஸ் அறவாரியத்தின் நடவடிக்கை தமிழ்ப் பள்ளி மாணவர்களை பெருமளவில் ஊக்குவிக்கும் என மேலவை உறுப்பினர் சுரேஷ் சிங் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு எம்மாதிரியான உதவியை வழங்க முடியுமோ அதனை தாம் நிச்சயம் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக சிலாங்கூர் மாநிலம் மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் இந்த தங்கப்பதக்கம் விழாவை நடத்துவதற்கு ஓம்ஸ் அறவாரியம் தயாராக இருக்கின்றது. தங்களது மாநிலங்களில் இவ்விழாவை நடத்த வேண்டும் என விரும்புவோர் நேரடியாக ஓம்ஸ அறவாரியத்தை நாடலாம் என தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் ப.முருகன் தெரிவித்தார்.