வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பினாங்கு அரசுக்கு எதிராக விஷமப் பரப்புரை! – காவல் நிலையத்தில் புகார்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

பினாங்கு அரசுக்கு எதிராக விஷமப் பரப்புரை! – காவல் நிலையத்தில் புகார்!

பினாங்கு செப்டம்பர் 21-

மை கார்டு எனப்படும் அடையாள அட்டை விநியோகிப்பு விவகாரத்தில் பினாங்கு மாநில அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக சமீப காலமாக சமூக வலத் தளங்களில் உழன்று வரும் விஷமப் பரப்புரை தொடர்பில், இங்கிருக்கும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பினாங்கு முதல்வர் சவ் கொன் இயாவ் தலைமையிலான மாநில அரசு, அதிகார துஷ்பிரயோகமாக செயல்பட்டு குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் அந்நியர்களுக்கும் அடையாள அட்டைகளை விநியோகித்து வருவதாக பரப்பி விடப்படும் விஷமப் பிரசாரத்தில் துளியளவும் உண்மையில்லை என்று அவர் முறையிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் தட்டி கேட்க முயலும் தரப்பினர்களையும் தடுத்து நிறுத்தும் அதிகாரப் பலத்துடனும் மாநில அரசு செயல்படுவதாக சம்பந்தப்பட்ட விஷமப் பரப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பிலும் மாநில முதல்வரின் அந்தரங்க காரியதரிசியுமான தே லாய் ஹெங் தனது கடும் கண்டனத்தை வெளிக் காட்டியுள்ளார்.

பினாங்கு மாநில முதல்வரின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவரின் நிழற் படத்தோடு இணைக்கப்பட்ட ஒரு அட்டையில் விஷம வாக்கியங்களுடன் அந்த பொய்ப் பிரசாரம் பரப்பப்பட்டு வருவது திட்டமிடப்பட்ட கீழறுப்புச் செயலென்றும் தே லாய் ஹெங் வெகுண்டு எழுந்துள்ளார்.

நாட்டின் தேசியக் கோட்பாடுகளை மதித்து பண்பாகவும் கண்ணியமாகவும் ஆட்சி நடத்தி வரும் பினாங்கு மாநில அரசுக்கு எதிராக,கிளம்பியிருக்கும் இத்தகைய அவதூறும் அபாண்டமும் இன ஒருமைப்பாட்டை வேரறுக்கச் செய்யும் சதிச் செயலென்று அவர் விவரித்துள்ளார்.

நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற தரப்பினரால் பரப்பப்பட்டிருக்கும் இந்த வீண் பழியால் குற்றமறியாத அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கும் தே லாய் ஹெங்,இந்த விவகாரத்தில் காவல் துறையினர் தீரமான ஆய்வினை மேற்கொண்டு இதன் பின்னணியில் மறைந்திருக்கும் விஷமிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன