வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜிப் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்! விரைவில் பொதுத்தேர்தல் – டத்தோஸ்ரீ தனேந்திரன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜிப் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்! விரைவில் பொதுத்தேர்தல் – டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர் செப். 21-

14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது பொய் புகார்களை நம்பிக்கை கூட்டணி வாரி இறைத்தது. அந்தக் காரணத்திற்காக ஒரு நல்ல தலைவரை இந்திய சமுதாயம் இழந்துவிட்டது என மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டுத் தொடங்கி இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப். அவர் மீது பொய் புகார்கள் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வந்ததால் இந்திய சமுதாயம் அவரை ஒதுக்கி விட்டது. அதனால் மிகப் பெரிய இழப்பை சந்தித்ததும் நாம்தான் என லெம்பா பந்தாய் மக்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

லெம்பா பந்தாய் பொறுப்பாளர்களுடன் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், செயலாளர் சுதாகர்

நம்பிக்கை கூட்டணி வழங்கிய வெற்று வாக்குறுதிகள் என்றுமே நிறைவேற்றப்படாது என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். உடனடியாகத் தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்த அவர் பொதுத்தேர்தலுக்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். எப்போது வேண்டுமானாலும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் நிலையில்தான் அரசாங்கம் செயல்படுவதாகவும் டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

ஆட்சியைக் கைப்பற்றினால் டோல் சாவடியை அகற்றுவோம். பெட்ரோல் விலையை 1 வெள்ளி 50 காசாக நிலை நிறுத்துவோம். மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவோம். பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை கூட்டணி வழங்கிய எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் டத்தோஶ்ரீ தனேந்திரன்

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டது மக்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையைத் தந்திருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தின் நடைமுறைகள் தேசிய முன்னணி மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லெம்பா பந்தாய் தொகுதியில் 650 பேர் மக்கள் சக்தி கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இதற்குத் தலைமை ஏற்றுள்ள பார்த்திபனின் நடவடிக்கை தம்மைப் பெரிதும் கவர்ந்ததாகக் கூறியவர் மக்கள் சக்தி மக்களின் நலனுக்கு என்றும் செயல்படும் என உறுதியளித்தார்.

லெம்பா பந்தாய் மக்கள் சக்தியின் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேச அம்னோ செயலாளர் டத்தோ ரம்லான் கலந்துகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன