போலீஸ் வேட்டை : 4 இந்தியர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

சைபர் ஜெயா செப்டம்பர் 23-

சைபர்ஜெயாவில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் ஆயுதம் ஏந்திய 4 இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் 21 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ‘ஸ்ரீ கேங்கை’ சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

சைபர்ஜெயாவிலுள்ள ஸ்காய் பார்க் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் போலீஸ்காரர்கள் நோக்கிச் சுட்டதன் காரணமாக இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ நோர் அஸான் ஜமாலுடின் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்கள் 29 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள். சம்பவத்தின் போது போலீஸ்காரரை நோக்கி அவர்கள் மூன்று முறை சுட்டார்கள். தங்களைத் தற்காத்துக்கொள்ளப் போலீஸ்காரர்கள் திருப்பிச் சுட்டதாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

செராஸ் தாமான் செகாரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிறகு இவர்கள் அனைவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் மூவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நான்காவது சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரிடம் எந்த அடிப்படை ஆவணமும் கிடைக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.

இந்தக் குண்டர் கும்பலில் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற விசாரணையையும் போலீஸ் தொடர்ந்து நடத்தும் என அவர் தெரிவித்தார். இந்தக் கும்பலின் தலைவன் எனக் கூறப்படும் ஸ்ரீ, பல ஆண்டுகளாகத் திருட்டு, கும்பல் கொள்ளை மற்றும் போதைப்பொருள் போன்ற 20 குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருப்பதாக நோர் அஸாம் கூறினார்.

முதல்கட்ட விசாரணையில் இந்தக் கும்பல் அதிகாலையில் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் ஆயுதமேந்தி கொள்ளையிடும் நடவடிக்கையையும் தொடர்ந்து வந்ததாக அவர் கூறினார். குறிப்பாக இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி இது வரையில் 72 கொள்ளை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.