பினாங்கு. செப் 30-

கடந்த வாரம் 19 செப்டம்பர் தொடங்கி 22 செப்டம்பர் வரை பினாங்கு கேர்னி ப்லாசா பேரங்காடியில் , மலேசிய சாதனை புத்தகத்தின் ஏற்பாட்டில், “எம்.பி.ஆர் நேரலை 2019” மிக வெற்றிகரமாக நடந்தேரியது.

இந்நிகழ்ச்சியைப் பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யூவ் 20 செப்டம்பர் 2019 மாலை 5 மணியளவில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எனினும், நீண்ட கால அளவைக் கொண்ட சாதனை முயற்சிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டன. அந்த வகையில், ட்ரெட்மில்லில் 48 மணிநேரத்திற்கு, 300 கிலோமீட்டருக்கும் கூடுதலாகக், குறைந்த பட்சம் ஒரு மணிநேரத்திற்கு 6 கிலோ மீட்டர் வேகம், என்ற நிபந்தனைகளோடு மலேசியர்கள் நால்வர் களமிறங்கினர்.

அவர்களுள் தலைநகரைச் சார்ந்த வணிகர்கள் மூவர், மகேந்திரன் ( 46 ),  முகமட் அச்லான் அப்டுல்லாஹ் ( 38 ) , வாப்பி முனீராஹ் ( 34 ). இவர்களுடன் சுங்கை பட்டாணி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஹரிராஸ்குமார் ஹரிஹரன்-னும் ( 23 ) பங்கெடுத்தார்.

20 செப்டம்பர் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கிய இவர்களது சாதனை போராட்டம் , 22 செப்டம்பர் மதியம் 1.30- க்கு நிறைவுற்றது. ஒட்டுமொத்தமாக இக்குழு 48 மணிநேரத்தில் 316.25 கிலோ மீட்டர் ஓடி , மலேசிய சாதனை புத்தகத்தில் தங்களது பெயர்களைப் பதித்தனர்.

பொதுவாகவே, உடற்பயிற்சி மேற்கொள்வோர் கூடிய பட்சம் ஒரு நாளில் 2 மணி நேரத்திற்குதான் ட்ரெல்மில்லில் பயிற்சி செய்வர். ஆனால், 48 மணிநேரத்திற்கு இடைவிடாது ஓட வேண்டும் எனும்பொழுது, அதற்கு அலாதி பயிற்சியும், மனவலிமையும் வேண்டும்.

இவர்கள் நால்வருமே பல ஆண்டுகளாக ஓட்டத்துறையில் ஓயாது பயிற்சி செய்து வருவதாலே, இவ்விடயம் சாத்தியமாகியுள்ளது. ஒரு நபர் மொத்தமாக 12 மணிநேரத்திற்கும், 80 கிலோமீட்டருக்கும் ஓடினால் மட்டுமே இச்சாதனை கைகூடியிருக்கும். இக்குழுவினர் அதனை மெய்ப்படுத்தியுள்ளனர். இவர்களுள் பெண்ணொருவரும் பங்கெடுத்துள்ளது , பெண்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

22 செப்டம்பர், மதியம் 2.30 மணியளவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தலைமையில் இந்நால்வருக்கும் மலேசிய சாதனை நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சாதனையைப் புரிந்தது குறித்து வினவுகையில், இந்நால்வருமே தங்களது அலாதி மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தினர்.

தங்களது சாதனை இதனோடு நின்றுவிடாது என்றும், தாங்கள் படைத்த சாதனையைத் தாங்களே முறியடிக்க விடாது பயிற்சி செய்வோம் என அந்நால்வரும் நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து 48 மணிநேரத்திற்குத் தூக்கமின்றி, அதீத உடல் அசதிக்கு இடையேயும் இந்தச் சாதனையை வெற்றிகரமாகப் படைத்துள்ள இந்நால்வருக்கும் அநேகனின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்து.

1 COMMENT

Comments are closed.