தீபாவளியன்று கால்பந்தாட்டமா? ஒத்தி வையுங்கள்!

கோலாலம்பூர், செப். 30-

அக்டோபர் மாதம் பினாங்கில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய கால்பந்தாட்டம் தீபாவளி அன்று நடைபெறுவது மலேசியர்கள் என்ற உணர்வை பாதிப்படைய வைக்கின்றது என மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதியின் விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார்.

ஏர் ஏசியா ஆதரவில் மேக்சிம் ஏற்பாடு செய்யும் பினாங்கு கிண்ண கால்பந்து போட்டி அக்டோபர் 26, 27ஆம் தேதிகளில் போலோ திடலில் நடைபெறுகிறது. . இந்த கால்பந்து போட்டியில் மொத்தம் 5 பிரிவுகள் இருக்கின்றன. 8 வயதிற்குட்பட்ட போட்டி, 10 வயதிற்கு உட்பட்ட போட்டி, 12 வயதிற்குட்பட்ட போட்டி, 14 வயதிற்கு உட்பட்ட போட்டி, 16 வயதிற்குட்பட்ட போட்டி ஆகியவை நடக்கின்றன.

மலேசியாவில் முதன்மை பெருநாட்களில் ஒன்றாக விளங்கும் தீபாவளி திருநாளில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தவறு என்று ஆண்ட்ரூ டேவிட் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் நோன்புப் பெருநாள், சீனப் பெருநாள், தீபாவளி ஆகிய பண்டிகைகள் தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய கால்பந்தாட்டம் தீபாவளியன்று நடத்தப்படுவது மலேசிய இந்தியர் உணர்வுகளை மதிக்காத வகையில் அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த கால்பந்தாட்டத்தில் இந்திய கால்பந்து அணிகள் கலந்து கொள்ளாத பட்சத்தில் கால்பந்து விளையாட்டில் இந்தியர்களுக்கு ஆர்வம் இல்லை என்ற சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என இந்த கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்களை நாம் பாராட்டுகின்றோம். ஆனால் அதில் இந்தியர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்பதுதான் இங்கே நிசப்தமான உண்மையாக இருக்கின்றது.

இந்த கால்பந்தாட்டத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும். மாறாக இதை நடத்த நாம் அனுமதித்தால் அல்லது இந்த கால்பந்து போட்டி நடந்தால் வரும் காலங்களில் தீபாவளி விடுமுறைகளில் இது போன்ற பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதையும் ஆண்ட்ரூ டேவிட் சுட்டிக்காட்டினார்.

ஹவால் முஹர்ரம் பண்டிகையின்போது எந்த இசை நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்பதில் தொடர்பு பல்லுடக அமைச்சு உறுதியாக இருக்கின்றது. அதேபோல் பெருநாள் காலங்களில் இதுபோன்ற விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படக் கூடாது என்பதில் இளைஞர் விளையாட்டு துறையும் முடிவெடுக்க வேண்டுமென மலேசிய இந்திய காங்கிரசின் நிர்வாக செயலாளர் ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து இளைஞர் விளையாட்டு அமைச்சருக்கு அதிகாரத்துவ கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் கால்பந்து விளையாட்டாளர் சந்தோஷ் சிங், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தர்மகுமாரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.