ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > துன் மகாதீரை சந்திக்கவிருக்கும் பழனியின் ஆதரவாளர்கள்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

துன் மகாதீரை சந்திக்கவிருக்கும் பழனியின் ஆதரவாளர்கள்!

கோலாலம்பூர், ஆக. 24-

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியைத் தொடர்ந்து ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் ஆதரவாளர்கள் நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்கவிருப்பதாக ம.இ.காவின் முன்னாள் வியூக பிரிவுத் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் தெரிவித்தார்.  இந்த சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் முதலான விபரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், துன் டாக்டர் மகாதீரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த சந்திப்பிற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் முன்னாள் பிரதமரான துன் மகாதீரை பெரிதும் மதிக்கின்றோம். நாங்கள் அவரை நிச்சயமாக சந்திப்போம் என அவர் சொன்னார்.  இந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இடம்பெற மாட்டார் என அறியபடுகிறது. அதேவேளையில், அவரது ஆதரவாளர்களில் யார் துன் மகாதீரை சந்திக்கவிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு ம.இ.கா. இரு பிரிவுகளாக பிளவுப்பட்டு நடப்புத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதை இராமலிங்கம் ஒப்புக்கொண்டார். ஆதரவாளர்கள், கிளைத் தலைவர்களில் பாதிப்பேர் பழனியை ஆதரிக்கின்றனர். இன்னும் பாதி பேர் சுப்ராவை ஆதரிக்கின்றனர். இரண்டு பேரையும் முறையே 2 ஆயிரம் கிளைத் தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு சுப்ரா தலைமையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பழனியின் ஆதரவாளர்களில் பாதி பேர் தங்களின் கிளைகளை எடுத்துகொள்வதற்காக கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டனர். இருந்த போதிலும் அவர்கள் சுப்ரா தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியையே கொண்டிருக்கின்றனர்.

கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் பழனியின் ஆதரவாளர்கள் சுப்ராவிற்கு இதற்கு முன்னர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர். இருப்பினும், சுப்ரா தரப்பினர் இன்னமும் அமைதி காத்து வருகின்றனர். சுப்ரா தரப்பில் சுயநல போக்குடன் இருக்கும் சிலர் கட்சி பிளவுக்கு தீர்வு காண விரும்பவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு கட்சியின் தேசியத் தலைவராக சுப்ரா வந்ததிலிருந்து மௌனம் காத்து வருகிறார். பழனி தரப்பினரான நாங்கள் பலமுறை அவரை சந்தித்து பிரச்னைகளுக்கான தீர்வை காணும் வகையில் பரிந்துரைகளை வழங்கிவிட்டோம். ஆனால், இன்னமும் இவ்விவகாரத்தில் தீர்வு காணப்படவில்லை.

சுப்ராவை நான் ஆதரிக்க விரும்பவில்லை என்று இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பழனிவேலை சுகாதாரத்துறை அமைச்சருமாகிய அவர் வீழ்த்தியுள்ளார். கட்சியின் தலைமைத்துவ போராட்டத்தில் தேசியத் தலைவர் பதவியிலிருந்து பழனி விரட்டப்பட்டார். அதிலிருந்து பிளவுகள் ஏற்பட்டு இன்று வரையில் கட்சியில் இரண்டு தரப்புகள் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. பழனிவேலை வீழ்த்த சுப்ரா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா இல்லையா என்பது தொடர்பில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணியில் இணைவது குறித்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. இருப்பினும், அக்கூட்டணியில் இணைய வேண்டும் என நாடு தழுவிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் வலியுறுத்தி வருகின்றனர். பழனியின் ஆதரவு கிளைகள் மீண்டும் சுப்ரா தலைமையிலுள்ள ம.இ.காவில் இணைந்தாலும் இன்னமும் பழனியை அவர்கள் ஆதரித்து வருவதாக இராமலிங்கம் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன