வசூலை அள்ளுகிறது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை! மலேசிய ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குடும்பங்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றமான ‘மலேசிய ஃபேன் கிளப்’ குவாலலம்பூர், ஜோஹர் பஹ்ரு, செதியவான் மற்றும் செரி இஸ்கந்தர் பெரக் ஆகிய இடங்களில் ரசிகர் காட்சிகளை திரையிடப்பட்டதாக அவ்வமைப்பின் தலைவர் ஷாகினா கூறினார்.

இப்படம் மலேசியாவின் ஜிசிஎஸ் சினிமாஸ் பட்டியளில் முதல் மூன்றாவது இடப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தை, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்நிலையில் மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள், திரையரங்கில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கார்ட்டுகளையும் வழங்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்கள்.

அப்பா இல்லாத மகன், தன் தங்கையின் மீது அதிக பாசம் வைத்துள்ளார். அந்த தங்கையின் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும் போது என்ன செய்கிறார் என்பதே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தன் அப்பாவுடன் பிறந்தவர்களான வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, ஆதிரா ஆகியோரின் ஆதரவில்லாமல் இருக்கிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் போது நின்று விடுகிறது.

அப்போது சிவகார்த்திகேயனுடன் இருக்கும் முன்பகையை மனதில் வைத்து ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து பழிவாங்க நினைக்கிறார் நட்டி. அது என்ன பகை, சிவகார்த்திகேயன் தன் குடும்பப் பிரச்சினைகளை எப்படிச் சரி செய்கிறார், தங்கைக்குப் பிரச்சினை என்றவுடன் சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், அதனை மறந்து போராடிக்காமல் பார்க்க வைத்த விதத்தில் சபாஷ் பெறுகிறது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.