புத்ராஜெயா, அக்.3-

மக்கள் விரும்பினால், , பொருள் மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி-யை மீண்டும் அறிமுகப்படுத்தும் அவசியத்தை அரசாங்கம் ஆராயத் தயாராக இருக்கிறது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். 2020 வரவு-செலவுத் திட்டத்தில், ஜி.எஸ்.டி-யை மிகவும் குறைவான தொகையில், அதாவது மூன்று விழுக்காட்டிற்கு அறிமுகப்படுத்துமாறு, இதற்கு முன்னர், மலேசியப் பொருளாதார ஆய்வுக் கழகம் பரிந்துரை செய்திருந்தது.

புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சில், இன்று வியாழக்கிழமை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக் கொள்கையை அறிமுகபடுத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார். ஜி.எஸ்.டி வரி முறையை அமல்படுத்தும் முடிவு, வரும் 11-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட விருக்கும் 2020 வரவு-செலவுத் திட்டத்தில் உட்படுத்தப்படாது என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வந்த ஆறு விழுக்காடு ஜி.எஸ்.டி, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அகற்றப்பட்டு, விற்பனை மற்றும் சேவை வரியான எஸ்.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைக்க உதவும் வகையில், அரசாங்கம், குறைந்த விழுக்காட்டில், மீண்டும் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற சில தரப்பினரின் கருத்திற்கு பதிலளிக்கும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.