ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > உலகளாவிய போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஏர் ஆசியாவின் இலவச விமான டிக்கெட்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

உலகளாவிய போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஏர் ஆசியாவின் இலவச விமான டிக்கெட்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 7-

தேசிய மற்றும் அனைத்துலக நிலையிலான மாநாடு மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏர் ஆசியா நிறுவனம் இலவசமாக 100 விமான டிக்கெட்டை வழங்கியிருக்கிறது.

அனைத்துலக ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த இலவச விமான டிக்கெட் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் ஏர் ஆசியா மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறுகையில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏர் ஆசியா நிறுவனம் இத்திட்டத்தை ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியதாகும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இது பெருமையான விஷயமும் கூட. ஏர் ஆசியா நிறுவனம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது இதர விமான நிறுவனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். இதர விமான நிறுவனங்களும் தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமல்லாது மலாய், சீனப்பள்ளிகளுக்கு இதுபோன்ற திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஏர் ஆசியா-தமிழ் அறவாரியத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது மேற்கண்டவாறு கூறினார்.

மாணவர்கள் மேற்கல்வியை எந்த துறையில் தொடர்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தொழில்புரட்சி 4.0 வளர்ச்சியினால் வருங்காலங்களில் மனிதர் இல்லாமல் எந்திரங்களால் மட்டுமே இயங்கக்கூடிய வேலைகள் வரலாம். இதனால், பல்கலைகழகங்களில் மேற்கல்வியை முடித்த பிறகும் வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கல்வி பயிற்சியின் கீழ் கல்வியை தொடரலாம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஏர் ஆசியாவின் இந்தப் புதிய திட்டம் குறித்து தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு.சி.திரவியம் கூறிகையில், இந்த ஒப்பந்தத்தின் வழி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பாடங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க முடியும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த அனைத்துலக போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த விமான டிக்கெட்டுகளை விநிநோகிப்பது தமிழ் அறவாரியத்தின் பங்கு. ஓர் ஆண்டுக்கு 100 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்காக தனிப்பட்ட குழு ஒன்று அமைக்கப்படும். மாணவர்கள் பங்கு பெறும் போட்டியின் தரம், அவர்களது படைப்புகள் மற்றும் குடும்ப பின்னணியை முன் வைத்தே இந்த டிக்கெட்டுகளை அக்குழு வழங்கும் என்று அவர் கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கல்வி துணையமைச்சர் தியோ நி சிங், ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாகி ரியாட் அஸ்மாட், தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வம் உட்பட சில பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன