5 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது ஆஸ்ட்ரோ!

நமது சமுதாயத்தில் பலத் துறையில் சாதனைப் புரிந்த இளம் சாதனையாளர்களைக் கண்டறிந்து ஆஸ்ட்ரோவின் மாபெரும் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஆஸ்ட்ரோ வானவில் சாதனையாளர் விழாவில் அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவ்வகையில், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்ப எனத் தங்களுக்கான முத்திரைகளைப் பதித்து வரும் 5 சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்த ஆசிரியர் சுரேன் ராவ், மண்ணுக்குள் புதைந்து வெளியாகும் வித்தையிலும் நீருக்குள் நீண்ட நேரம் மூழ்கியிருக்கும் வித்தையில் மலேசியா சாதனையாளர் விருது பெற்ற விக்னேஸ்வரன் அழகு, உலக ரீதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கப்பதக்கங்கள் வென்ற ஸ்ரீ அபிராமி சந்திரன், Sunride எனும் ராக்கெட் அணியைத் தலைமை தாங்கி ஐக்கிய இராச்சிய குழுவை முறியடித்த விஷன் நாயர் பிரகாசன் மற்றும் இளம் செய்தி வாசிப்பாளரும் இந்தியாவில் ஹானர் விருது பெற்ற நேசன் செல்வராஜ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

அக்டோபர் 5-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வாகனம் நிறுத்தும் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை மற்றும் டத்தோ எம். மகேந்திரன் விருதுகளை எடுத்து வழங்கினர்.

ஆஸ்ட்ரோ வானவில் சாதனையாளர் விழாவை விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்கள் கபில் மற்றும் செல்வகுமார் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்.