அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து

கோலாலம்பூர், அக்.9-

தமிழ், சீனப்பள்ளிகள் நிலைநாட்டப்படும்  என்று பிரதமரும் கல்வி அமைச்சரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கெராக்கான் கேட்டுக் கொண்டது.

தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்று பாக்காத்தான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக  வரலாற்றில் மிகச் சிறந்த துணை கல்வியமைச்சரான தியோ நோ சிங் கூறினார் .

ஆனால், இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது சட்டப்பூர்வ சாசனம் அல்ல. மேலும் இவ்வறிக்கை ஒரு பைபிள் அல்ல என்றும் இதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் துன் மகாதீர் வெளிப்படையாகவே கூறியதை  கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சுட்டிக் காட்டினார்.

தேர்தல் கொள்கை அறிக்கையை தாய்மொழிப் பள்ளிகளுக்கான உத்தரவாதமாகப் பயன்படுத்துவது  பலவீனமாகவும் தெளிவற்றதாகவும் தோன்றவில்லையா என்று தியோ நீ சிங்கை நோக்கி டோமினிக் லாவ் வினவினார்.

அதே சமயம், தியோ மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறாரா என்றும் தனது ஐயப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

“தியோவிற்கு சில விஷயங்களை நான் நினைவுறுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் ஒரு துணையமைச்சர் .தேர்தல் முடிந்தவுடன் யூ இசி அங்கீகரிக்கப்படும் என்ற வாக்குறுதியை நீங்கள் மென்று முழுங்கிவிட்டீர்கள். அதே வேளையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் கூட்டணி சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதமர் துன் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

பக்காத்தானின் தேர்தல் வாக்குறுதியானது ஒரு பண பந்தய விளையாட்டு போன்றது.வாக்குகளைப்  பெறுவதற்குப் பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்தது. இந்த அரசியல் சூதாட்ட பந்தயம் இப்போது சரியத் தொடங்கிவிட்டது. இப்பந்தயத்தில் பக்காத்தான் தலைவர்கள் லாபமடைந்தனர். மக்களோ வேதனைப் படுகின்றனர் என்றார் அவர்.

பக்காத்தான் தேர்தல் வாக்குறுதிகளில் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி காட் எழுத்து அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த முடிவை மீட்டுக் கொள்ள முடியுமா என்று கல்வியமைச்சருக்கு டோமினிக் லாவ் சவால் விடுத்தார்.

தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்றும் ஒரே பள்ளி நடைமுறை நிராகரிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசியல் வல்லமை தங்களிடம் இருப்பதை பிரதமரும் கல்வியமைச்சரும் நிரூபிக்க  முடியுமா என்று டோமினிக் லாவ் சவால் விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன