கோலாலம்பூர், அக். 9-

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 27ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகளின் சிறுகதை பிரிவில்  சிலாங்கூர், பந்திங் கைச் சேர்ந்த விஜயகுமார் முனியாண்டி முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

தொடர்ந்து சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த ஹெலினா கிறிஸ்டி சின்னப்பன் இரண்டாம் பரிசையும் பகாங், கோல லிப்பிஸைச் சேர்ந்த துரைமுத்து சுப்ரமணியம் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

தலைநகர் விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ கே. ஆர். சோமா அரங்கில் இன்று நடைபெற்ற இலக்கிய போட்டிகளின் பரிசளிப்பு  விழா   சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவனின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

சிறுகதை பிரிவில் ஆறுதல் பரிசுகளை மனோகரன் சந்தன்  (காப்பார், சிலாங்கூர்) , வைரக்கண்ணு சாத்தையா(பெட்டாலிங் ஜெயா) மற்றும் கிறிஸ்ட் சின்னப்பன்(பத்து ஆராங், சிலாங்கூர்)  ஆகியோர்  பெற்றனர்.

புதுக் கவிதை பிரிவில் பேராக், தைப்பிங்கைச் சேர்ந்த சந்திரசேகரன் ரெங்கசாமி முதல் இடத்தை வென்ற வேளையில் ஜொகூர், ஸ்கூடாயைச் சேர்ந்த லோகேஸ்வரி ஏழுமலை இரண்டாம் இடத்தையும் கெடா, பாடாங் செராயைச் சேர்ந்த உதயகுமாரன் கந்தசாமி மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

ஏ,தேவராஜன்,  ஜீவனமணி செபஸ்டியன்,  உஷாராணி சாமிநாதன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். வெற்றியாளர்களுக்கு இச்சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமசுந்தரம் பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு வெற்றியாளர் 2,500 வெள்ளியும், இரண்டாம் பரிசு வெற்றியாளர் 1,500 வெள்ளியும் மூன்றாம் பரிசு வெற்றியாளர் 750 வெள்ளியும் பெற்றனர். ஆறுதல் பரிசு தொகை 500 வெள்ளியாகும்.

டான்ஸ்ரீ சோமா, டத்தோ சகாதேவன் மற்றும் இதர பொறுப்பாளர்களுடன் புதுக் கவிதை பிரிவில் முதல் பரிசை வென்ற சந்திரசேகரன் ரெங்கசாமி தனது குடும்பத்தினருடன்.

 

இதனிடையே, மரபுக் கவிதை பிரிவில் குணசேகரன் நடேசன் (ஈப்போ, பேராக்),  முருகன் சோலைமலை ( பிறை, பினாங்கு), சுப்பையா மாரிமுத்து (மா. அ. சந்திரன்-பாடாங் செராய், கெடா) ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை தட்டிச் சென்றனர். குள்ளினன் நாராயணசாமி, சந்திரன் முனியன், விக்னேஸ்வரன் பார்த்திபன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.

கட்டுரைப் போட்டி பிரிவில் ஸ்கூடாய், சுபாஷினி ஜெயசீலன் முதலாவது பரிசைப் பெற்ற வேளையில், பூச்சோங் முனியாண்டி வரதன், பாரிட் புந்தார் நதியா வாசுதேவன் இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வென்றனர். இதே பிரிவில் ஆறுதல் பரிசுகளை குமரசாமி தண்ணிமலை, விஜயலட்சுமி கிருஷ்ணசாமி மற்றும் மணிமாறன் சிங்காரவேலு ஆகியோர் பெற்றனர்.

மாணவர்களுக்கான சிறுகதை பிரிவு போட்டியில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கயல்விழி இளங்கோவன் முதல் பரிசை வென்ற வேளையில், காயத்ரி விவாகரன், தபிதா ராமசாமி ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர். பூவரசி ஆனந்தன், ஜென்சி மேரி ஆர். பீட்டர், விஷாலினி சேது ஆகியோர் ஆறுதல் பரிசுகளுக்குத்  தேர்வு பெற்றனர்.

இலக்கியப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் கரு.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்ட இவ்விழாவில் அரங்கம் முழுவதும்  இலக்கிய ஆர்வலர்கள்  நிறைந்திருந்தனர்.