வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > நாட்டில் 70 விழுக்காடு மரண சம்பவங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன!
சமூகம்முதன்மைச் செய்திகள்

நாட்டில் 70 விழுக்காடு மரண சம்பவங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன!

கோலாலம்பூர், அக்டோபர் 9-

இந்நாட்டில் 70 விழுக்காடு மரண சம்பவங்கள் நீரிழிவு, மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுவதாக உணவு ஆய்வியல் துறை நிபுணர் ஒருவர் கூறுகிறார் .

உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வாதம் போன்றவையும் தொற்றா நோய்கள் பட்டியலில் அடங்கும் என்று உணவு ஆய்வியல் துறை நிபுணரான சோ பே ஹூவாங் தெரிவித்தார்.

தங்களுக்கு இதுபோன்ற நோய்கள் இருக்கும் சாத்தியம் குறித்து மக்கள் அறவே பொருட்படுத்துவதில்லை. மேலும், 72 விழுக்காட்டினருக்கு நீரிழிவு இருப்பது இன்னும் கண்டறியப்படாமலேயே உள்ளது என்று இங்கு கெராக்கான் கட்சி ஏற்பாட்டிலான

“மலேசியர்களின் கருத்துக் களம்” சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய்  சிறப்பு வருகை புரிந்தார்.

உடற்பயிற்சி செய்யாதிருத்தல், காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளாதது, கொழும்பு நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி உட்கொள்ளுதல் போன்றவை மேற்கண்ட உபாதைகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்நோய்களில் இருந்து விடுபட சரிவிகித சத்துணவு, நேரம் தவறாத  உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் மீதான பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்வது மிக அவசியம் என்று பே ஹூவாங் வலியுறுத்தினார்.

கட்சியின் உதவி தலைவர் டத்தோ பரமேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய இக்கருத்தரங்கை டாக்டர் எடி எட்வர்ட் சிறப்பாக வழிநடத்தினார்.

தொடர்ந்து  விளையாட்டு பிரிவு மருத்துவ நிபுணரான டாக்டர் அர்விந்த் குமார் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து நன்கு எடுத்துரைத்தார்.

யோகா வழி உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்குத் தீர்வு காணலாம் என்பதை யோகா பயிற்சி மூலம் செய்து காட்டினார் காப்பார் ஸ்ரீ அகத்தியர் யோகா மையத்தைச் சேர்ந்த யோகா மாஸ்டர் விஆர் கிருஷ்ணன் ரெங்கசாமி.

நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அனைவருக்கும் கெராக்கான் துணைத் தலைமை செயலாளர் வெண்டி சுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.

“மலேசியர்களின் கருத்துக் களம்” ஏற்பாட்டு குழு தலைவர் அ. ராமராவ் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுற்று வட்டார மக்களும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன